தர்மத்தை நிலைநாட்டும் தசாவதாரம்

வேதங்களை மீட்ட மச்சாவதாரம்

ஆந்திர மாநிலத்தில் புத்தூர் அருகே நாகலாபுரத்தில் (சென்னை – திருப்பதி வழியில் ஊத்துக்கோட்டை நாகலாபுரம்), பகவான் வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமத்துடன், இடுப்பின் கீழ்ப்பாகம் மீன் வடிவமாகக் கொண்டு காட்சி அளிக்கிறார். கடலில் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்ட அவதாரம் மத்ஸ்ய அவதாரமாகும். அதனால், இங்குள்ள பெருமானுக்கு “வேதநாராயணப் பெருமாள்’’ என்ற பெயர் அமைந்துவிட்டது போலும். பங்குனி 12,13,14 தேதிகளில் சூரிய ஒளி இப்பெருமாளின் பாதம், நாபி மற்றும் சிரசில் படுவது, இன்றும் நடக்கும் அற்புதம். அந்த நாட்களில் இத்தலம் விழாக்கோலம் பூண்டிருக்கும். சூரிய நாராயணனே, வேதநாராயணனை வழிபடுவதாக ஐதீகம். அன்னை, வேதவல்லி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள்.

தேவர்களுக்காக கூர்மாவதாரம்

திருமாலின் இரண்டாவது அவதாரமான கூர்மாவதாரம் ஆமை வடிவிலானது. முன்னொரு காலத்தில் விஷ்ணுலோகம் சென்ற வித்யாதர மகள், திருமாலின் அருள்பெற்று ஓர் பூமாலை கிடைக்கப் பெற்றாள். அவள் அதைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்மலோகம் வழியாகத் திரும்பி வரும்போது, துர்வாச மகரிஷியைக் கண்டாள். மகரிஷியை வணங்கி, அவரிடம் பூமாலையைத் தந்தாள். அம்மாலையின் மகத்துவத்தை அறிந்த முனிவர் தேவலோகம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, இந்திரன் தன் யானையான ஐராவதத்தில் பவனி வந்துகொண்டிருந்ததைக் கண்டு, அவனுக்கு ஆசிகளை அருளியதோடு அல்லாமல் பூமாலையையும் அவனிடம் கொடுத்தார். பாவம், தேவேந்திரனுக்குப் போதாத காலம் போலும்! பூமாலையை அலட்சியமாக வாங்கியவன், தன் யானையின் தலையில் வைக்க, யானையோ பூமாலையை எடுத்துக் கீழே போட்டு தன் காலால் நசுக்கியது.

இதைக் கண்ட துர்வாச மகரிஷிக்குக் கோபம் வந்துவிட்டது.‘மாலவனின் மகிமைமிக்க மாலையை, உனக்கு நலம் ஏற்படட்டும் என்று அளித்தேன். நீயோ, அதை அலட்சியம் செய்துவிட்டாய். ஆணவத்தால் நீ செய்த இந்தச் செயலின் காரணமாக, உன் செல்வங்களையெல்லாம் இழப்பாய்’ என்று சாபமிட்டுச் சென்றுவிட்டார். இதைக் கேட்ட இந்திரன், தன் தவறை உணர்ந்து, இதற்குப் பரிகாரம் தேடி பாற்கடல் சென்று, பரந்தாமனைத் தரிசித்து, விவரங்களைக் கூறினான். தனக்கு விடிவு ஏற்பட வழி செய்ய வேண்டும் என வேண்டினான்.திருமாலும் மனம் இரங்கி, இதற்குப் பரிகாரம் பாற்கடலைக் கடைவதே ஆகும். அதற்கு மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பெரிய பாம்பைக் கயிறாகக் கொண்டு, பாற்கடலைக் கடைய வேண்டும். ஒரு பக்கம் தேவர்களும், மறுபக்கம் அசுரர்களும் வாசுகியான பாம்பைக் கொண்டு பாற்கடலைக் கடைய வேண்டும் என்று சொல்ல, அசுரர்கள் பாம்பின் தலைப்பகுதியையும், தேவர்கள் வால் பகுதியையும் பிடித்துக்கொண்டு கடைய முற்பட்டார்கள்.

வாசுகியின் கட்டினால் பிடிபடாத மந்தர மலையானது, நழுவி நழுவி, கடலின் அடிக்குப் போகத் துவங்கியது. இதனால் தேவ – அசுரர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திருமாலிடமே வேண்ட, திருமாலும் மிகப் பெரிய ஆமையாய் வடிவெடுத்து, கடலினுள் சென்று மந்தர மலையைத் தாங்கினார். ஒருவழியாகப் பாற்கடல் கடையப்பட்டது. இதுவே திருமால் கூர்மாவதாரம் எடுத்த வரலாறு.திருப்பாற் கடலிலிருந்து விதவிதமான வஸ்துகள் தோன்றின. கற்பக விருட்சம், காமதேனு, தன்வந்திரி பகவான் என்று பல நல்ல நிதிகள் அதிலிருந்து கிடைத்தன. அதற்கு முன்பாக, ஆலகால விஷம் தோன்றி அனைவரையும் திகைக்க வைத்தது. ஆடலரசன், அதைத் தான் ஏற்றுத் தன் கண்டத்தில் நிறுத்திக் கொண்டதால், நீலகண்டன் ஆனார். பாற்கடலில் உதித்த பாவையான திருமகளைப் பரந்தாமன் ஏற்றுக் கொண்டான். இவையெல்லாம் தனிக்கதை.

இந்த ஆமை வடிவ அருளாளனுக்கு அழகு மிகு கோயிலொன்று, ஆந்திராவில் அமைந்துள்ளது. சென்னை – கொல்கத்தா மார்க்கத்தில், வால்டேர் அருகில் அமைந்துள்ள இத்தலத்துக்கு “ஸ்ரீ கூர்மம்’’ என்றே பெயர். அந்தக் காலத்தில் இப்பெருமானின் திருவுருவத்தைப் பற்றிச் சரியாக அறியாமல், இப்பெருமானை கூர்மலிங்கேஸ்வர் என்ற திருநாமத்துடன் சைவ ஆகமப்படி பூஜா முறைகளை நடத்தி வந்தனர். பகவத் ராமானுஜர் தன்னுடைய வடதேச திவ்ய யாத்திரையின்போது இத்தலத்துக்கும் விஜயம் செய்து, அங்கு சாளக்கிராம மூர்த்தியாய் ஆமை வடிவில் இந்தப் பெருமானைக் கண்டு வியந்து, அவர் திருமால்தான் என்று அங்குள்ளவர்களுக்குப் புரியவைத்தார். இந்தத் திருக்கோயிலின் கிழக்குவாசல் எதிரில் துவஜம்தம்பம் இருந்ததைக் கண்டு, அங்கு வணங்கி எழுந்து கோயிலை வலம் வந்தார். அவர் தெற்கில் திரும்பியபோது மூல மூர்த்தியும் அவர் செல்லும் திசை நோக்கித் திரும்பியது. மேற்கில் திரும்பும்போது, மேற்கு நோக்கி நிலைத்து, இன்றளவும் அதே கோணத்தில் காட்சி அளிக்கிறது. பின்னர் நிலைமையை அங்குள்ளவர்களுக்கு விளக்கி, இது ஒரு திருமால் தலம் என்பதை நிலைநாட்டினார். மற்றும் தானே அத்தலத்தில் மூன்று நாட்கள் தங்கி ஆராதனை செய்து மகிழ்ந்தார்.

பூமியை காத்த வராஹ அவதாரம்

தசாவதாரங்களில் மூன்றாவதாக திருமால் எடுத்த அவதாரம் வராஹ அவதாரம். அதாவது பன்றியின் அமைப்பு. ஹிரண்யாட்சன் என்ற அசுரன் பூமிப்பிராட்டியை கடலுக்கடியில் வைத்துவிட்டான். பூமிதேவியைக் காப்பதற்காக, திருமால் பன்றியாக உருவெடுத்து கடலுக்குள் புகுந்து அசுரனைக் கொன்று, பூமிப்பிராட்டியைத் தன் இரு கோரப் பற்களின் இடையில் வைத்துக் கொண்டு வெளிவந்தார். அவரின் தோற்றம் பிரமாண்டமாக இருந்ததாம். இதை (வாமன) திரிவிக்ரம அவதாரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள் ஆழ்வார்கள். வராஹ அவதாரத்தில் அவரின் இரு கோரப் பற்களிடையே ஒரு பந்தாக அமைந்தாள் பூமிப்பிராட்டி. ஆனால், திரிவிக்ரம அவதாரத்தில் உலகமே (பூலோகம்) அவரின் ஓரடியால் அளக்கப்பட்டது. இதைப் பார்க்கும்போது வராஹ அவதாரத்தின் அளவு பெரியதா என்று வியக்கத் தோன்றுகிறது. பூமிப் பிராட்டியின் விஸ்தீரணம் பெரிதா, திருமாலின் அவதாரத் திருமேனிகளின் அளவு பெரிதா என்ற வியப்பும் இதில் அடங்கும். தன் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் வராஹருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக,

‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகற்கு
பண்டொருநாள் மாசுடம்பில் நீர் வாரா
மானமிலாப் பன்றியாய்’

– என்று திருமாலுக்குத் தன் மீதுள்ள கருணையைக் குறிப்பிடு கிறாள்.பன்றி இனமானது மிகவும் அசுத்தமான இடங்களில் வசிக்கக்கூடியது. கடலோ, பாசியும் அழுக்குகளும் நிறைந்தது. எனினும், என் பொருட்டு எம்பெருமான் காட்டிய கருணை எத்தகையது என்று ஆண்டாள் திகைக்கிறாள். வராஹப் பெருமான் தன் திருமேனியைக் குறுக்கிக் கொண்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் பூமிப்பிராட்டிக்கு ஞானோபதேசம் செய்கிறார். அதனால், அத்தலமே திருக்குறுங்குடி ஆயிற்று என்பர். வராஹ அவதாரத்திலே பகவான் பூமிப்பிராட்டிக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறார்.‘`எந்த மனிதன் தன் உடலும் மனமும் நன்றாக உள்ள நிலையில், தன்னை ஒரு முறையாவது தியானம் செய்கிறானோ, அவனை அவனது மரண காலத்தில் சரீர சங்கடங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, என்னை நினைக்க முடியாத நிலையில் அவதிப்பட்டு மரணம் அடைகிறானோ, அந்தச் சமயத்தில் நான் அவனை நினைத்துக் காப்பாற்றி என்னுடன் இணைத்துக் கொள்கிறேன். இங்கு நினைப்புதான் முக்கியமானதே தவிர, யார் யாரை நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல’’ என்ற வாக்குறுதியைக் கொடுக்கிறார். இதைத்தான் கடைசி வார்த்தை என்று மனித வாழ்வில் குறிப்பிடுவார்கள். வைணவத்தில் இதை ‘சரம ச்லோகம்’ என்பார்கள். முதன் முதலில் வராஹப் பெருமாள்தான் சரம ச்லோகம் அருளினார். பிற்பாடு ராமபிரானும் சீதாபிராட்டியும் அளித்த சரம ஸ்லோகங்களை ராமாயண காவியத்தின் மூலம் அறியலாம். அதேபோன்று கிருஷ்ண பகவான் அருளிய,

‘ஸர்வதர்மாந் பரீத்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி மாசுச’

– என்ற கீதாஸ்லோகம், கிருஷ்ண சரம ச்லோகமாகப் போற்றப் படுகிறது.வராஹ அவதாரத்துக்குப் பல திருக்கோயில்கள் நாடெங்கிலும் அமைந்துள்ளன. முக்கியமாக ஸ்ரீ முஷ்ணத்தில் சாளக்கிராம சுயம்பு மூர்த்தியாய் பூவராக ஸ்வாமி காட்சி அளிக்கிறார். சென்னை அருகே மகாபலிபுரம் செல்லும் பாதையில், திருவிடந்தை திருத்தலத்தில் ஆதி வராஹமூர்த்தி, நின்ற கோலத்தில் லட்சுமிப் பிராட்டியை இடது மடியில் வைத்துக் கொண்டபடி காட்சி அளிக்கிறார். இடது பக்கம் லட்சுமிதேவி அமைந்திருப்பதாலேயே இத்தலம் “திரு இடவெந்தையாக’’ அழைக்கப்படுகிறது. அதேபோன்று மகாபலிபுரத்தில் பழைய கலங்கரை விளக்குப் பக்கம் உள்ள ஓர் குடவரைக் கோயிலில் வராஹப் பெருமான் தனது வலப்பக்கம் லட்சுமிதேவியை அணைத்தவாறு காட்சி அளிக்கிறார். அதனால், இத்திருக்கோயில் வலவெந்தை என்று அழைக்கப்படுகிறது. இவ்விரண்டு பெருமாள்களின் தரிசனம் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கவும், நன்மக்கட்பேறு அளிப்பவராகவும் பிரார்த்தனா மூர்த்திகளாகவும் விளங்குகிறார்கள். திருப்பதி, ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி, ஸ்ரீ வில்லிபுத்தூர் போன்ற பல தலங்கள் வராஹ சேத்திரங்களாகவே கருதப்படுகின்றன.

The post தர்மத்தை நிலைநாட்டும் தசாவதாரம் appeared first on Dinakaran.

Related Stories: