×

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.

தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ளநீர் சூழ்ந்த வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ரூ.2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஃபெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Storm ,K. Stalin ,Chennai ,Chief Minister MLA ,Indian Ocean ,Fengel ,
× RELATED சென்னை உள்பட தமிழ்நாட்டில் மழை நீர்...