×

தமிழ்நாட்டிற்கு உரிய உதவி வழங்கப்படும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி.. விரைவில் ஒன்றிய குழுக்களை அனுப்ப பரிசீலனை!!

சென்னை : தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயல் நவம்பர் 23ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவெடுத்து, தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. டிசம்பர் 1ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டது.

இந்த சேதங்கள் குறித்து, தமிழ்நாடு அரசு முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டு, தற்காலிகமாக சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைபேசி உரையாடலில் தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் ஒன்றிய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய குழு அனுப்புவது குறித்து ஒன்றிய அரசு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஒன்றிய அரசின் வேளாண், உள்துறை, பாதுகாப்புத் துறையினர் அடங்கிய 3 குழுக்களை அனுப்ப ஒன்றிய அரசு இன்று பரிசீலனை செய்கிறது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் குழுக்கள் ஆய்வு செய்யும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு உரிய உதவி வழங்கப்படும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி.. விரைவில் ஒன்றிய குழுக்களை அனுப்ப பரிசீலனை!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamilnadu ,Chennai ,Modi ,Tamil Nadu ,M.K.Stalin. ,Cyclone ,Fenchal ,Dinakaran ,
× RELATED வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்...