×

கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை.. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழப்பு!!

கொனாக்ரி: கினியா நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான முடிவால், ரசிகர்கள் இடையே வெடித்த வன்முறை, அதனை தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் கால்பந்து அணிகள் இடையே இறுதி போட்டி நடைபெற்றது. அப்போது போட்டியின் 82வது நிமிடத்தில் வீரர் ஒருவருக்கு நடுவர் சிவப்பு அட்டையை காட்டி இருக்கிறார். இதையடுத்து நடுவர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மோதல் வெடித்தது. கற்களை வீசியும், கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒருவருக்கொருவர் வீசியபடி கடுமையாக தாக்கிக் கொண்டதால், கால்பந்து மைதானமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

உயிரை காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளுடன் பலரும் மைதானத்தை விட்டு வெளியேற முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் மோதலை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மைதானத்திற்கு வெளியில் இருந்தவர்களும் கையில் கிடைத்த ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மைதானத்திற்கு வெளியே சென்ற பிறகும் ஆவேசம் தணியாமல் இரு தரப்பும் மோதிக் கொண்ட காணொளிகள் வெளியாகி உள்ளன. வன்முறை மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சடலங்கள் குவிந்துள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கலவரத்துக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கினியா நாட்டு பிரதமர் அமடோ ஊரி பா உத்தரவிட்டுள்ளார்.

The post கினியாவில் நடந்த கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை.. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 100 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Guinea ,Konagri ,Nezaragore ,
× RELATED கால்பந்து ஆட்டத்தில் கலவரம்: கினியாவில் 56 பேர் பலி