×
Saravana Stores

பெஞ்சல் புயலால் செங்கை, விழுப்புரம், கடலூர் கடுமையாக பாதிப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்

* மீட்பு பணி விரைவாக நடந்து வருவதாக பேட்டி

சென்னை: பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். சேத விவரங்களையும் கேட்டறிந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக செய்யுமாறு உத்தரவிட்டார். வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்துக்கும் – புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது கொட்டித்தீர்த்த கனமழையால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் 50 செ.மீ. வரை மழை பொழிந்தது. இதனால் அப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல் துறை, தீயணைப்பு துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். இந்த மாட்டங்களில் உள்ள பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் வழங்கி வருகிறார்கள். ஏரி, குளங்கள், ஆறுகள் நிரம்பி அதன் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக மின்சார கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

இதைதொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி, சிவசங்கர் ஆகியோர் மரக்காணம், கோட்டக்குப்பம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நிவாரணமாக வழங்கினர். கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் முகாமிட்டு பார்வையிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் புயல் மழையினால் விழுந்த மரங்களை, பிற மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மின்பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அகற்றினர். இதனால் நேற்று முன்தினம் மாலையே பல இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டது.

தென்பெண்ணை, வராகநதி, பாலாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிடவும் நிவாரண உதவிகளை வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சென்றார். வழியில் செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பகுதியில் கனமழையால் வீழ்ந்த மின்கம்பங்கள் அமைத்திடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

பின்னர் மரக்காணம்- மண்டவாய் புதுக்குப்பம் பகுதியில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 100 நபர்களுக்கு வேட்டி, சேலைகள், அரிசி, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும் வீடுகள் சேதமடைந்து பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார். தொடர்ந்து, மரக்காணம் விருந்தினர் மாளிகையில், விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படக் காட்சியை முதல்வர் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவரங்கள் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட 100 நபர்களுக்கு வேட்டி, சேலை, உணவுப் பொருட்களையும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். மேலும் விழுப்புரம் கிழக்கு, பாண்டி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 500 நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்டி, சேலை, உணவுப் பொருட்களையும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். பின்னர் காணை ஊராட்சி ஒன்றிய பகுதியில் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, சேத விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அரகண்டநல்லூருக்கு நேரில் சென்ற முதல்வர், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள், ரப்பர் படகுகள் மூலம் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் இருக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் திண்டிவனத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 2,000 நபர்களுக்கு வேட்டி, சேலை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முதல்வர் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முதல்வர், புயல் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைச் சீர்செய்ய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள்,

அத்தியாவசியச் சேவைகளை மீட்டெடுத்து வரும் மின்துறை பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, மருத்துவத்துறை, முக்கியமாக பேரிடர் மீட்பு படைப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் தன்னுடைய பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிப்பதாகவும் முதல்வர் கூறினார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ.அன்பரசன், செந்தில்பாலாஜி, சிவசங்கர், எம்பி. ரவிக்குமார், எம்எல்ஏக்கள் செஞ்சி மஸ்தான், லட்சுமணன், சிவா, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து துறை ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, கலெக்டர் பழனி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பெஞ்சல் புயலால் செங்கை, விழுப்புரம், கடலூர் கடுமையாக பாதிப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sengai, Villupuram, Cuddalore ,Cyclone Benjal ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Chengalpattu ,Villupuram ,Cuddalore ,Benjal ,Senkai, Villupuram, Cuddalore ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மணல் அகற்றம்