இந்த வகையில், ரயில் தண்டவாளங்களை கண்காணிக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ள கேங்மேன், கீமேன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்டவாள பகுதிக்கு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், காட்டுப்பகுதியில் ரயில்வே தண்டவாளம் செல்கிறது. அங்கெல்லாம் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வர வாய்ப்பிருப்பதால், 24 மணி நேர கண்காணிப்பில் ஊழியர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு பெருமழையின்போது, தூத்துக்குடியில் தண்டவாளம் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டது.
அப்போது, கண்காணிப்பு பணியில் இருந்த கேங்மேன் கொடுத்த தகவலின் பேரில், அவ்வழியே வந்த ரயில் நிறுத்தப்பட்டு, 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அதனால், மழை நேரத்தில் ரயில் போக்குவரத்தை சீரான முறையில் மேற்கொள்ள தண்டவாள கண்காணிப்பு மிகவும் முக்கியம் என்பதால், அதனை இயக்கப்பிரிவு, பொறியியல் பிரிவு ஊழியர்கள் திறப்பட செய்திட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ரயில் போக்குவரத்தை எவ்வித பாதிப்பும் இன்றி சீராக மேற்கொள்ள அனைத்து பிரிவு ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக தண்டவாள கண்காணிப்பில் இருக்கும் கேங்மேன், கீமேன்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த ஊழியர்கள், 24 மணி நேரமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தண்டவாள பாதையில் வெள்ளநீர் சூழ்கிறதா?, திடீரென காட்டாற்று வெள்ளம் வர வாய்ப்புள்ளதா? என கண்காணித்து வருகின்றனர். அதேபோல், தண்டவாளத்தை ஒட்டிய இடங்களில் தண்ணீர் தேங்கினால், அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொறியியல் மற்றும் இயக்கப்பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் கோட்ட வாரியாக எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர்’’ என்றனர்.
The post தண்டவாளத்திற்கு மழைவெள்ளம் வருவதை கண்காணிக்க வேண்டும்: கேங்மேன், கீ மேன்களுக்கு உத்தரவு.! சீரான ரயில் போக்குவரத்தை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை appeared first on Dinakaran.