நன்றி குங்குமம் தோழி
கல்வியே தனி மனிதனின் ஆயுதம். கல்வியறிவுதான் மனித குலத்தின் வாழ்வையும் மேம்படுத்துகிறது. வளர்ந்து வரும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி அவசியம். ஆனால் இன்றளவும் நாம் அறியாத உலகின் பல பகுதிகளிலும் கல்வி என்பது எட்டாக்கனியாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் சென்னையின் கண்ணகி நகரும் இருந்தது. ஆனால் இப்போது அப்பகுதி மாணவர்கள் எல்லோரும் சிறப்பான கல்வியை பெற்று உயர் பதவிகளில் இருக்கின்றனர். 6ம் வகுப்பு வரையிலும் படித்த சமூக ஆர்வலர் உமா மகேஸ்வரி இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறார் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.
“நான் படித்தது 6ம் வகுப்பு வரை தான். என்னால் குழந்தைகளிடம் படி என்றுதான் சொல்ல முடியுமே தவிர, அவர்களுக்கு பாடங்களை சொல்லித்தர தெரியாது. ஆனால் நான் செய்து வரும் இந்த சேவையினால் 750க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்” என்று நெகிழ்ந்த உமா மகேஸ்வரி 19 வருடங்களாக சென்னை கண்ணகி நகர் பகுதியில் இலவச இரவுநேர பாடசாலை ஒன்றினை தொடங்கி வழிநடத்தி வருகிறார்.
“என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக என் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை கட்ட முடியவில்லை. அதனால் என் மூன்று குழந்தைகளும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த சம்பவம்தான், எந்தக் காரணத்திற்காகவும் குழந்தைகளின் கல்வி தடைபடக்கூடாது என்ற எண்ணத்தை என் மனதில் ஆழமாக பதிய வைத்தது. நான் இலவச இரவுநேர பாடசாலை நடத்த இதுதான் முக்கிய காரணம். கட்டணம் கட்ட முடியவில்லை என்பதால் என் பிள்ளைகளை என்னால் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.
வீட்டு வாசலில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் தான் மூவரும் படிப்பார்கள். அதுவே அவர்களுக்கு பழக்கமானது. மாலை முதல் இரவு வரை வீட்டு வாசலில் படிப்பதை ழக்கமாக்கிக்கொண்டனர். சில நாட்களில் என் பிள்ளைகளுடன் சேர்ந்து மேலும் 2 பிள்ளைகள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தனர். அது அப்படியே 10, 30, 100, 300 என பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமானது. அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது நாம் ஏன் கல்விக்கான ஒரு சேவையினை அமைக்கக்கூடாதுன்னு எனக்குள் எண்ணம் ஏற்பட்டது. நான் அதிகம் படிக்கவில்லை என்பதால் எனக்கு பாடங்களை சொல்லித்தர தெரியாது. ஆனால் என் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கும் அந்தப் பிள்ளைகளை படி என்று சொல்வதற்கு கூட யாருமில்லை என்பதை உணர்ந்தேன். நான் அவர்களை புத்தகம் எடுத்து படிக்க சொல்வேன். அந்த ஒரு சொல்லே அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். இதே ஊக்கத்துடன் அவர்களுக்கு பள்ளிப் பாடங்களை சொல்லிக்கொடுத்தால் இன்னும் சிறப்பாக படிப்பார்கள் என்று நினைத்தேன்.
மாலை நேரம் முதல் இரவு நேரம் வரை மாணவர்கள் படிப்பதற்கான ஒரு பாடசாலை அமைத்து எந்த தொந்தரவுகளும் இல்லாமல் வசதியாக அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு ஒரு இடத்தினை உருவாக்கினேன். அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்களை நியமித்தேன். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அதிகாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதற்கென்று தனிப்பட்ட ஆசிரியரை நியமித்தேன். மாலை நேரத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு வந்து படிப்பார்கள். ஆரம்பத்தில் இந்தக் கல்விச் சேவையை வினோதமாக பார்த்த அப்பகுதி மக்கள் அதன்பின்னர் ஒவ்வொருவராக அவர்களின் பிள்ளைகளை பாடசாலையில் கொண்டுவந்து சேர்த்தனர்.
கண்ணகி நகரைப் பொறுத்தவரை இங்கு வசிக்கும் மக்கள் விடியற் காலை வேலைக்கு சென்றுவிடுவார்கள். இரவு தாமதமாகத்தான் வீடு திரும்புவார்கள். இதனால் அவர்கள் தங்களின் பிள்ளை
களின் கல்வி மேல் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருந்தனர். மேலும் அதில் பெரும்பாலானவர்கள் படிக்காதவர்கள். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த பாடசாலையை துவங்கினேன். அதன் மூலம் அப்பகுதி குழந்தைகளுக்கு கல்வி கிடைத்தால் அவர்கள் நல்ல நிலைக்கு வர முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் உயரும்.
கல்வியால் ஒரு குடும்பமே முன்னேறும்போது அதுதான் அவர்களின் சிறந்த வளர்ச்சி’’ என்றவர், கண்ணகி நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளான செய்யூர், பெரும்பாக்கம் என ஐந்து இடங்களில் பாடசாலைகளை அமைத்து தன்னுடைய கல்விச் சேவையை விரிவாக்கியுள்ளார். ‘‘பாடசாலையை அமைப்பது மட்டுமில்லாமல், பொருளாதாரம் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அதற்கான உதவியினை செய்ய நினைத்தேன்.
நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள், என்னால் தனிப்பட்ட முறையில் பொருளாதார உதவியினை செய்ய முடியாது. ஆனால் மற்றவர்களிடம் இருந்து உதவி பெறலாம். அதனால் நிதி உதவிக்காக ஸ்பான்சர்களை தேடினேன். ஒரு மாணவருக்கான கல்விக் கட்டண உதவியை பெற குறைந்தது 10 ஸ்பான்சர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவ்வாறு பலரின் உதவியால் இதுவரை 752 பட்டதாரிகளை உருவாக்கியிருக்கேன். அவர்கள் அனைவரும் நன்றாக படித்து தற்போது நல்ல வேலையில் உயர் பதவிகளிலும் உள்ளனர்.
நான் இது போன்ற சேவைகளில் ஈடுபட என் அப்பாதான் காரணம். அவர் எம்.ஜி.ஆர் இலவச பாடசாலை ஒன்றினை அமைத்து வழி நடத்தி வந்தார். அதைப் பார்த்து வளர்ந்ததால்தான் எனக்குள்ளும் அந்த சேவை மனப்பான்மை ஏற்பட காரணம். குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அவர்களுக்கு சிறு தொழில் அமைத்து தருவது, அதற்கான நிதி உதவிக்கான வழிவகை செய்வது, தொழில்முறை பயிற்சிகள் தருவது போன்ற பல்வேறு உதவிகளையும் செய்து வந்தேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் பகுதியில்தான். ஆனால் கண்ணகி நகர் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் அங்கு குடிபெயர்ந்து அங்குள்ள மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன்.
பெண்களுக்கு தையல் பயிற்சியினை அளித்து இதுவரை 3000 தையல் கலைஞர்களை உருவாக்கியிருக்கேன். 135 பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை அமைத்து கொடுத்திருக்கேன். இதன் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தொழில் தொடங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தேன். வேலையையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளின் படிப்பிலும் கவனம் செலுத்தவும் முடியும்” என்றவரின் சேவைகளை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளனர். விருதுகளும் தான் உருவாக்கிய 752 பட்டதாரிகளும்தான் அவரது சொத்து என நெகிழும் உமாவின் சேவைகள் பெரிய பட்டியலாக நீள்கிறது.
“தினமும் குறைந்தது 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறேன். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு புத்தாடைகள் எடுத்து கொடுக்கிறேன். வளரிளம் பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டவர்களை மீட்பது, பள்ளிப் படிப்பை தொடராமல் இடைநிற்றல் செய்யும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது போன்ற சேவைகளையும் செய்து வந்தாலும் அதில் சில சவால்களையும் சந்திக்க நேரிடும். அறக்கட்டளை அமைத்தால் அதற்கு நிதியுதவி இருந்தால்தான் சிறப்பாக வழிநடத்த முடியும்.
நான் ஆரம்பித்த போது பலர் உதவி செய்ய முன்வந்தார்கள். ஆனால் இப்போது அந்த அளவிற்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை. இதில் வருத்தமடையக்கூடிய விஷயம் என்னவென்றால், மாணவர்ளுக்கு உதவுவதாக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் இல்லையென்று மறுத்துவிடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். ஆனாலும் நான் எதற்கும் சளைத்து போகாமல் அவர்களுக்கானதை அமைத்துக் கொடுத்திடுவேன்.
நான் கேட்பது ஒன்றுதான் நீங்கள் கொடுக்கும் ஒரு சிறு தொகையும் அவர்களுக்கு பெரும் பலனை கொடுக்கும். தற்போது பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் போதுமான ஆசிரியர்கள் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் இங்கு பணியாற்ற வரலாம்” என்று கோரிக்கை வைக்கும் உமாவிற்கு எதிர்காலத்தில் ‘அன்பின் அன்னை’ என்ற பெயரில் முதியோருக்கான இல்லம் மற்றும் சிறு பள்ளிக்கூடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவாம்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post இலவச பாடசாலை… மகளிருக்கான தொழிற் பயிற்சி… சேவைகளை விரும்பும் பெண்மணி! appeared first on Dinakaran.