நாமக்கல், டிச.2: நாமக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்தது. தொடர்ந்து 2வது நாளாக கனமழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய சாரல்மழை, நேற்று மாலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டிதீர்த்தது. நேற்று காலை 2வது நாளாக விடாமல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடும் குளிர் மற்றும் தொடர் மழையால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. தொடர் மழையின் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்ற போதிலும், காய்கறி சந்தைகள், மீன் விற்பனை கடைகள், மட்டன், சிக்கன் விறப்னை கடைகளில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.
நாமக்கல் நகரில் நேற்று காலை முதல் இரவு வரை மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த மாதம் பெய்த மழையின் போது, மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 18 ஏரிகள் முழுமையாக நிரம்பியது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. தண்ணீர் வரத்து அதிகம் உள்ள ஏரிகளை, பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் இணைப்பு சாலை, வள்ளபுரம் பைபாஸ் இணைப்பு சாலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும் அனைத்து புறநகர் பஸ்களும் அந்த இடத்தில் மெதுவான ஊர்ந்து சென்றன. இது போல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்) எருமப்பட்டி 30, குமாரபாளையம்- 4, மங்களபுரம்- 61, மோகனூர்- 15, பரமத்திவேலூர்- 11, நாமக்கல்- 30 கலெக்டர் அலுவலகம்- 24, புதுச்சத்திரம்- 45, ராசிபுரம்- 65, சேந்தமங்கலம்- 46, திருச்செங்கோடு- 15, கொல்லிமலை செம்மேடு- 80 மில்லி மீட்டர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் 441.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கொல்லிமலையில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
The post 2 நாளாக தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.