×
Saravana Stores

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 24 மணி நேரமும் கண்காணிப்பு

 

குன்றத்தூர், டிச.2: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 20.07 அடி உயரமும், நீர் வரத்து மணிக்கு 4217 கன அடியாகவும், மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் தற்போது 2621 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  அதே சமயம் ஏரியில் இருந்து 131 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக ஏரியின் நீர் மட்டம் 22 அடியை நெருங்கும் போது பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்படுவது வழக்கம்.

மழை நீர் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீர் என்று இரண்டும் ஒரு சேர தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இரவு, பகலாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதேபோல், புழல் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. மழையின் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 3470 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஏரியில் கொள்ளளவு நேற்று காலை நிலவரப்படி 2650 மில்லியன் கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 195 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரி நிரம்பி உபரி நீர் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 24 மணி நேரமும் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Kunradthur ,Cyclone Benjal ,Chennai ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvallur ,Sembarambakkam lake ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு