×
Saravana Stores

புயல் பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பருவ மழை மற்றும் பெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் 12 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலையில், 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி முழுமையாக சேதமடைந்துள்ளன.

ஏற்கெனவே, கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு அரசு தரப்பில் பயிர் காப்பீடு செய்யாததால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு ஹெக்டேருக்கு பயிர் காப்பீட்டு தொகையாக வழங்கும் ₹84 ஆயிரமும் கிடைக்க பெறவில்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ₹34 ஆயிரம் வழங்க வலியுறுத்தினேன். ஆனால், அந்த தொகையும் அரசு வழங்கவில்லை.
குறிப்பாக, தேசியப் பேரிடர் நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ₹17 ஆயிரமாக அறிவித்த நிவாரண தொகையினை கூட வழங்காமல், குறைத்து ₹13,500 ஆக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது புயல் மழையில் மீண்டும் விவசாய பெருமக்கள் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, பெஞ்சல் புயலினால் டெல்டா மாவட்டங்களில் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக முழு நிவாரண தொகையை வழங்கிடுமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post புயல் பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,Chennai ,Cyclone Benjal ,Tamil Nadu ,Delta ,
× RELATED பாஜவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி?...