×
Saravana Stores

துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு வரும் 10ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு வருகிற 1ம் தேதி தொடங்குகிறது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை கலெக்டர் 16 இடம், போலீஸ் டிஎஸ்பி-23, வணிகவரித் துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28ம் தேதி வெளியிட்டது.

இப்பதவிக்கான முதல்நிலை கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 973 பேர் எழுதினர். முதல்நிலை தேர்வுக்கான ரிசல்டை 50 நாட்களில், அதாவது செப்டம்பர் 2ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவர்களுக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு நடைபெற உள்ளது. மெயின் தேர்வு வருகிற 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடக்கிறது. மெயின் தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் குரூப் 1 மெயின் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான அறிவுரைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச்சீட்டுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு), வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை தேர்வுமையத்திற்கு கொண்டு வரவேண்டும்.

தேர்வர்கள் அனுமதிச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் தேர்வுக்கூடத்தில் அறைக்கண்காணிப்பாளர், தலைமை கண்காணிப்பாளர், ஆய்வு அலுவலர்கள், அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள் எவரும் அனுமதிச்சீட்டினை ஆய்வுக்காக கேட்கும்போது அவர்களிடம் காண்பிக்க வேண்டும்.

தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பத்தை கட்டாயம் பெறவேண்டும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். காலை 9 மணி வரை சலுகை நேரம் வழங்கப்படும். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும். தேர்வர்கள் தேர்வறைக்கு கறுப்புமை பேனா (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல் பேனா) மட்டுமெ பயன்படுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

The post துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 மெயின் தேர்வு வரும் 10ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DSP ,TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டி டிஎஸ்பி பணியிட மாற்றம்