புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

திண்டிவனம்: வெள்ளத்தில் பாதித்த விளைநிலங்களை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலம் பகுதியை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து திண்டிவனத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கு கன மழையால் சிறுபாலங்கள் உடைப்பு ஏற்பட்டு பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சுற்றியுள்ள விளைநிலங்களில் குறிப்பாக நெற்பயிர்கள் கனமழை மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பலத்த சேதமடைந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் வீடூர் அணை அருகில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மற்றும் மணிலா பயிர்கள் சேதமடைந்துள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளை அரசாங்கம் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மூலம் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்.

பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னையை உரிய நேரத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். நான் என் கடமையை தான் செய்கிறேன். விவசாயிகளுக்கு நிவாரணமாக அதிமுக ஆட்சியில் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கினோம்.டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படாததால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: