- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜனாதிபதி முர்மு
- தில்லி
- ஊட்டி
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- ஜனாதிபதி
- திரௌபதி மர்மு
- ஜனாதிபதி திரௌபதி முர்மு
- தின மலர்
ஊட்டி: நான்கு நாட்கள் பயணமாக தமிழகம் வந்திருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, புயல் காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி டெல்லியில் இருந்து தமிழகம் வந்தார். ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்கிய அவர், 28ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள டிஎஸ்எஸ்சி எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கு பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.
நேற்று முன்தினம் மாலை ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட தோடர், கோத்தர் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். நேற்று திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், பெஞ்சல் புயல் காரணமாக அங்கு கனமழை பெய்து வருவதால் ஜனாதிபதியின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று காலை 9.50 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நட்டு வைத்தார். நேற்றும் வானிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்வது ரத்து செய்யப்பட்டது. காலை 10.10 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு கோத்தகிரி வழியாக கோவை புறப்பட்டார்.
அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். ஜனாதிபதி புறப்பட்ட நேரத்தில் ஊட்டி-கோத்தகிரி சாலையில் மிகவும் மோசமான காலநிலை நிலவியது. கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்தது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. எனவே, முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியும், மிகவும் குறைந்த வேகத்திலும் ஜனாதிபதி கார் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனங்கள் சென்றன.
இதனால், சற்று தாமதமாக மேட்டுப்பாளையம் சென்றார். மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்ககல்லூரி ஓய்வு விடுதியில் தேநீர் அருந்திய பின் மீண்டும் கோவை விமான நிலையத்திற்கு கார் மூலம் சென்றார். ஜனாதிபதி சாலை மார்க்கமாக சென்றதை தொடர்ந்து, ஊட்டி-கோத்தகிரி மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், இச்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
The post தமிழகத்தில் புயலால் நிகழ்ச்சி ரத்து ஜனாதிபதி முர்மு டெல்லி திரும்பினார்: மோசமான வானிலையால் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்றார் appeared first on Dinakaran.