சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய மக்கள்

சென்னை: பெஞ்சல் புயலால் கனமழை பெய்ததால், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம், கீழ்கட்டளை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகளே தெரியவில்லை. முன்னதாக நேற்று முன்தினம் புயல் உருவாகிவிட்டது என்று சொன்ன உடனே, மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்த தொடங்கினார்கள்.

நேற்று காலைக்குள் ஏராளமான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. தரையில் நிறுத்தினால் பல ஆயிரம் ரூபாயை சர்வீஸ்க்காக கட்ட வேண்டியதிருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பிற்காக கார்களை நிறுத்தி உள்ளனர். வேளச்சேரி பாலத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கரணை பாலத்திலும் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். உண்மையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழையின் போது, பெரிய பாதிப்பினை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதி மக்கள் சந்தித்தார்கள்.

இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. அதுபோன்ற பாதிப்பு இப்போது ஏற்படாது என்றாலும், புயல் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வருவது ஒருபுறம் எனில், புயல் கரையை கடக்க தாமதம் ஏற்பட்டால், இந்த பகுதியையைத் தான் கடந்த ஆண்டு போலவே பாதிக்கும் என்ற அச்சம் மக்களுக்கு உள்ளது. அதனால் தான் மக்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வேளச்சேரி, பள்ளிக்கரணை பாணியை பின்பற்றி நேற்று சென்னை மேம்பாலம் பலவற்றிலும் பாலங்களில் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்ததை காண முடிந்தது.

The post சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: