சென்னை முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிய பொதுமக்கள்: காற்றின் வேகத்தால் ஆட்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிய சென்னை

சென்னை: சென்னை முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் அப்படியே வீடுகளுக்குள்ளே முடங்கினர். மேலும் நேற்று மாலை காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலைகள், தெருக்களில் ஆட்கள் நடமாட்டமில்லாமல் சென்னையே வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் சென்னையே வெள்ளக்காடாய் மாறியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

ஆனால் அரசின் துரித நடவடிக்கையால் பல இடங்களில் விரைவில் வெள்ளம் வடிந்தது. மழை மற்றும் பலமான சூறைக்காற்று காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.. அனைத்து பகுதிகளிலும் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.  காற்று பலமாக வீசியதால் பல பகுதிகளில் நேற்று அதிகாலையிலேயே மின் சப்ளை நிறுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைக்கப்பட்டிருந்ததால், உடனுக்குடன் வெள்ள நீர் வடிந்தது. மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும், தன்னார்வலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

* சென்னையில் பெய்த மழை அளவு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக கத்திவாக்கத்தில் 68.4 மிமீ, திருவொற்றியூரில் 48.9 மிமீ, பேசின் பிரிட்ஜ் 48.9 மிமீ, தண்டையார்பேட்டையில் 46.5 மிமீ, புதிய மணலியில் 42.2 மிமீ, மணலியில் 42.9 மிமீ, மாதவரத்தில் 40.8மிமீ, கொளத்தூரில் 39.9 மிமீ, ஐஸ் ஹவுஸ் பகுதியில் 39 மிமீ, வடபழநியில் 37.2 மிமீ என சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 30 இடங்களில் சராசரியாக 34.92 மிமீ மழை பெய்துள்ளது.

The post சென்னை முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழை வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிய பொதுமக்கள்: காற்றின் வேகத்தால் ஆட்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிய சென்னை appeared first on Dinakaran.

Related Stories: