2018ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளில் 82 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: திமுக எம்பி வில்சன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான பி.வில்சன் கேட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘கடந்த 2018ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் 684 பேரில், 21பேர் தாழ்த்தப்பட்டோர், 14 பேர் பழங்குடியினர், 82 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 37 பேர் சிறுபான்மையினர்” என்று தெரிவித்துள்ளார்.

”நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் எந்த வகையான பிரிவின் கீழும் ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பில் இல்லை ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களைவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் , “ உள்ளூர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு தொழிலாளர்கள் இடம்பெயர்வதை குறைப்பதற்கும் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “வேலை வாய்ப்பை உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னூரிமையாகும். பெண்கள் மற்றும் கிராமப்புற பணியாளர்கள் உள்பட நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, காப்பக வசதி, சம ஊதியம் போன்ற பெண் தொழிலாளர்களுக்கு சம வாய்ப்பு மற்றும் இணக்கமான பணிச்சூழலுக்கான பல விதிகள் தொழிலாளர் சட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

The post 2018ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்ட 684 நீதிபதிகளில் 82 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: திமுக எம்பி வில்சன் கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: