சென்னை: சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களுக்கு முதல்கட்ட பயிற்சி நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்தது. அதை தொடர்ந்து தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.
பலகட்ட சோதனைகள், விண்வெளி வீரர்களை தேர்வு செய்து பயிற்சி என திட்டம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பும் இஸ்ரோ – நாசாவின் கூட்டு திட்டமான ஏஎக்ஸ்-4 திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்கள் முக்கிய குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா, பேக்கப் குழு கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் திட்டத்தின் ஒரு பகுதியாக ககன்யாத்ரிகளுக்கான ஆரம்ப கட்ட பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த பயிற்சியில் பணி தொடர்பான தரை வசதி சுற்றுப்பயணங்கள், பணி வெளியீட்டு கட்டங்களின் ஆரம்ப கண்ணோட்டம், ஸ்பேஸ் எக்ஸ்சூட் பொருத்தம் சரிபார்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி உணவு விருப்பங்கள் குறித்து ஆரம்பக்கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அடுத்தகட்டமாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
The post சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் ககன்யான் திட்ட விண்வெளி வீரர்களுக்கு முதல்கட்ட பயிற்சி: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.