தொடர் மழை காரணமாக காஞ்சி, செங்கல்பட்டில் 61 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரம், நவ.30: தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் என மொத்தம் 909 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அனைத்து ஏரிகளிலும், கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில், 61 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி உள்ளிட்ட 7 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்தி வரம் கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளைபட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபுதூர் ஏரி, விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கல் தாங்கள், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 54 ஏரிகள் என மொத்தம் 61 ஏரிகள் நிரம்பியள்ளன. மேலும் விவசாயத்திற்கும், நீராதாரத்துக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய மிகப்பெரிய ஏரிகளின் முக்கிய ஏரிகளில், தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு விபரம்: காஞ்சிபுரம் – 01.20 மிமீ, உத்திரமேரூர் – 05.00 மிமீ, வாலாஜாபாத் – 02.00 மிமீ, பெரும்புதூர் – 04.00 மிமீ, குன்றத்தூர் – 13.00 மிமீ, செம்பரம்பாக்கம் – 09.80 மிமீ என மழை பதிவாகியுள்ளது.

The post தொடர் மழை காரணமாக காஞ்சி, செங்கல்பட்டில் 61 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.

Related Stories: