தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மதுரை மாவட்டம், இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் தற்போது பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.
இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு ஒன்றிய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை ஒன்றிய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தமிழ்நாடு அரசின் கவலைகளை, கடந்தாண்டு அக்.3ம் தேதியிட்ட கடிதம் வாயிலாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அரசுக்கு தெரிவித்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதை தடுக்க முடியாது என்று கூறி தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த நவ.7ம் தேதி நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக ஒன்றிய சுரங்கத் துறை தேர்வு செய்துள்ளது. இந்த டங்ஸ்டன் அமைக்கும் பகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. அதிலும், அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர் பெருக்க வரலாற்று தலம் என்பதால் குடைவரை கோயில்கள், சிற்பங்கள், சமண சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவு சின்னங்கள் இங்கு பிரபலமானது.

இந்த பகுதியில் எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும். இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த பகுதிகளில் இதுபோன்ற சுரங்க தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சுரங்க அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: