விடுதிகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்: உரிமையாளர்கள் நலச்சங்க பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 4வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் சீதாராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சங்கத்தின் தலைவர் சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: 2014ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள் வரையறைச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 500 பேர் மற்றும் ஆயிரம் பேர் தங்கும் விடுதிகளைக் கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட சட்டத்தால் 30 பேருக்கு உணவு சமைத்துக் கொடுத்து தன் பிழைப்பை நடத்தும் வாழ்வாதாரம் இல்லாத ஆதரவற்ற மகளிர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏழை, எளிய குடும்பத்து பிள்ளைகள் கிராமங்களில் படித்து விட்டு பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றி தங்கள் குடும்பத்தை காப்பாற்ற 5000 முதல் 6000 வரை பெற்றுக் கொண்டு உணவு, உறைவிடம், குடிநீர் மற்றும் அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்யும் விடுதி உரிமையாளர்கள் இச்சட்டத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசின் கவனத்திற்கு வைக்கிறோம். ஒரு நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி மாதம் ரூ.1,00,000 வாடகை கொடுத்து வீட்டில் வசித்தால் அவருக்கு மின்கட்டணம் குடியிருப்புக்கானது.

ஆனால் அதே நிறுவனத்தில் ரூ.15,000 சம்பளம் பெற்றுக்கொண்டு ரூ.5000 கொடுத்து விடுதியில் தங்கினால் அவர்களுக்கு வணிகப் பிரிவுக்கான மின்கட்டணம், இது எப்படி நியாயமாகும். விடுதிக்கான மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். பார்ம் டி எனப்படும் பொதுக்கட்டிடத்திற்கான சான்று விடுதிகளுக்கு பொருந்தாது என அறிவிக்கவேண்டும். சுகாதார சான்று சிறு விடுதிகளுக்கு பொருந்தாது என அறிவிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை பாதுகாத்து சமுதாய சீர்கேட்டை தடுத்து வளமான தரமான இளைய சமுதாயம் முன்னேற பாடுபடும் சிறுகுறு விடுதிகளை நசுக்கும் இந்த சட்டம் மாற்றப்பட வேண்டும்.

கலாச்சார சீர்கேட்டிற்கு பாரம்பரியத்திற்கு தமிழகத்தின் பேராண்மைக்கு அவமான சின்னங்களாக கோ லிவ் என்ற பெயரில் இருபாலர் தங்கும் விடுதிகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் பாதையை அடைத்து விடுதி உரிமையாளர்களை மிரட்டும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு ஐடி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் சுப்பையா, துணை தலைவர்கள் னிவாசலு, லகா ஸ்ரீனிவாசலு, இணை செயலாளர்கள் சின்னராஜா, உஷா, செந்தில்குமரன், சுப்பராயன், செயற்குழு உறுப்பினர் பி.காந்தி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

The post விடுதிகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்: உரிமையாளர்கள் நலச்சங்க பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: