×
Saravana Stores

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை திருடி விற்பனை: ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்பட 4 பேர் அதிரடி கைது

* சில்லரையில் பல கோடிக்கு விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலம்
* சிக்கியது எப்படி என பரபரப்பு தகவல்கள்

சென்னை: இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம் பெட்டமின் போதை பொருட்களை ரகசியமாக திருடி சென்னை முழுவதும் சில்லரை விற்பனை செய்து வந்த தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு காவலர்கள் உள்பட 4 பேரை சென்னை பெருநகர போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் மெத்தம் பெட்டமின் விற்பனை செய்த வழக்கில் அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் பரணி என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை பெரியார் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சுநேரந்திர நாத் (37) என்பவருடன் அடிக்கடி பேசியதும், அவர் மூலம் பல லட்சம் ரூபாய் பண பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் தனிப்படை போலீசார் ரகசியமாக சுநேரந்திர நாத்தை கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகம் அருகே சுரேந்திரநாத் போதை பொருள் விற்பனை செய்ய முயன்றபோது பின் தொடர்ந்து வந்த தனிப்படையினர் அதிரடியாக அவரை பிடித்தனர்.

சோதனை செய்தபோது, அவரிடம் 10 கிராம் மெத்தம் பெட்டமின் வைத்திருந்தது தெரியவந்தது. உடனே சுரேந்திரநாத்தை தனிப்படையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மெத்தம் பெட்டமின் அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஜேம்ஸ்(35) என்பவர் கொடுத்து விற்பனை செய்ய கூறியதாக தெரிவித்தார். அசோக் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வடபழனி ஒட்டகபாளையம் பகுதியை சேர்ந்த காவலர் ஜேம்ஸ் நேரடியாக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதியானது.

ஒன்றிய போதை தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் தனது நண்பர்களான காவலர்கள் ஆனந்த் மற்றும் சமீர் ஆகியோர் மூலம் மெத்தம் பெட்டமின் வாங்கி விற்பனை செய்து வந்ததும், விற்பனை செய்யும் பணத்தில் 30 சதவீதம் கமிஷனாகவும் பெற்று வந்தது தெரியவந்தது. ஆனந்த், சமீரை விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மியான்மர் நாட்டில் இருந்து இலங்கைக்கு மணிப்பூர், சென்னை வழியாக கடத்த முயன்ற வழக்குகளில் ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த மெத்தம் பெட்டமின் என்ற போதை பொருளை, நீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாத்து வைத்துள்ளார்.

அதை ஆனந்த் மற்றும் சமீர் ஆகியோர், தங்களின் உயர் அதிகாரிகளுக்கு எந்தவித சந்தேகங்களும் வராதபடி, கிலோ கணக்கில் சிறுக சிறுக திருடி, காவலர் பரணி மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் மூலம் விற்பனை செய்து வந்தது
தெரியவந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 கோடி மதிப்புள்ள 6 கிலோ 920 கிராம் மெத்தம் பெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம் பெட்டமினில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ளதை ஆனந்த் மற்றும் சமீர் எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓராண்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதை பொருளை எடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதற்கு காவலர்கள் பரணி, ஜேம்ஸ் போன்று சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் பணியாற்றி வரும் சில காவலர்கள் உதவியுள்ளனர். விற்பனை செய்யப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தின் மூலம் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் பெயரில் பல இடங்களில் வீட்டு மனைகள், நிலங்கள், தங்க நகைகள் வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததுள்ளனர்.

தனிப்படையினர் பிடித்த சுநேரந்திரநாத், காவலர் ஜேம்ஸ் மற்றும் ஒன்றிய போதை தடுப்பு பிரிவு காவலர்கள் ஆனந்த், சமீர் ஆகியோரை வடபழனி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போதை பொருள் விற்பனையில் தொடர்புடைய காவலர்கள் பட்டியலை எடுத்து தனிப்படையினர் அவர்களை கூண்டோடு கைது செய்யும் வகையில் ரகசியமாக விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒன்றிய போதை தடுப்பு பிரிவு மூலம் சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள மெத்தம் பெட்டமின் போதை பொருளை, சிறுக சிறுக திருடி ஒன்றிய போதை தடுப்பு பிரிவு காவலர்களே சென்னை முழுவதும் விற்பனை செய்த சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* தொடர்பு குழுக்கள் கூண்டோடு கைது
வழக்கமாக போதைப் பொருள் பிடிபட்டால், அவர்களை கைது செய்யும் போலீசார் அதன்பின்னர் எங்கிருந்து வாங்கினார்கள் என்ற விவரத்தை விசாரிப்பது இல்லை. கடமைக்கு வழக்குப்போட்டு விட்டு விடுவார்கள். ஆனால் சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பிறகு, போதைப் பொருள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டால், அதில் கடைசிவரை விசாரித்து முழுமையான சங்கிலியை உடைக்க வேண்டும். அப்போதுதான் போதைப் பொருள் விற்பனை தடுக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் வழக்கில் தொடர்ச்சியாக விசாரித்து அடுத்தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதுபோன்று 10க்கும் மேற்பட்ட தொடர் குற்றவாளிகள் குழு சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை திருடி விற்பனை: ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்பட 4 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Union Narcotics Division ,Ambalam ,Chennai ,Sri Lanka ,
× RELATED சென்னையை கலக்கி வந்த பாஜவை சேர்ந்த நில...