×
Saravana Stores

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை

தூத்துக்குடி: இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா (45) மற்றும் அந்தோணி டேனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 22 பேர் மீனவர்கள் ஜூலை 21ம் தேதி தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை கடல் அருகே மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் 22 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களில் 10 பேருக்கு புத்தளம் கோர்ட் பல லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மீனவர்களின் வக்கீல்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த இலங்கை புத்தளம் கோர்ட் 22 மீனவர்களில் 12 பேரை மட்டும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 118 நாளுக்குப் பின் இவர்கள் 12 பேரும் இலங்கையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தனர். இதேபோல், ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து, அக். 22ல் மீன் பிடிக்க சென்ற 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 16 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை கடந்த நவ. 20ல் விசாரித்த ஊர்க்காவல்துறை நீதிமன்றம் 16 தமிழக மீனவர்களில் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்தது. இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன், மீதமுள்ள 12 மீனவர்களையும் விடுதலை செய்தது. விடுதலையான மீனவர்கள் 12 பேரும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தனி வாகனத்தில் நேற்று ராமேஸ்வரம் அழைத்து வந்தனர். தண்டனையில் இருந்து தப்பிய மீனவர்களை அவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர்.

The post இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,Thoothukudi ,Anthony Maharaja ,Anthony Daniela ,Daruwaikulam ,Thoothukudi district ,
× RELATED புயல் எதிரொலி; ராமேஸ்வரம் பகுதியில்...