வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 முதல் 2024-25ம் ஆண்டுகள் வரை வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வெளியிடப்பட்ட மானியக்கோரிக்கை அறிவிப்புகள், முதல்வரின் அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை, பணிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேளாண் உற்பத்தியை தொடர்ந்து பெருக்குதல், விவசாயிகளுக்கு தேவையான துறை சார்ந்த திட்டங்களை தரமாகவும் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்கும் பணிகள், ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தும் பணிகள், தர்மபுரி மாவட்டத்தில் மா மகத்துவ மையமும், திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லி மகத்துவ மையமும் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் பணிகள், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் ரூ.65 கோடியே 30 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில், உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகளை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் பணிகள், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கும் பணிகள், தண்டையார்பேட்டை – காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகளை இடித்துவிட்டு ரூ.34.54 கோடி மதிப்பீட்டில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை துறைமுக பொறுப்பு கழகத்துடன் இணைந்து சென்னை, காசிமேட்டில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள், கடலூர் மாவட்டம் பெரியகுப்பம், புதுக்குப்பம் மற்றும் சி. புதுப்பேட்டை ஆகிய கடலோர கிராமங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பு தடுப்பு சுவர்களுடன் கூடிய புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடித்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமை செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் அபூர்வா, நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை துரிதமாக முடித்திட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

The post வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: