இந்நிலையில், உறவினர் வீட்டு விஷேசம் ஒன்றிக்கு செல்வதற்காக செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு சேமலைகவுண்டம்பாளையத்திலுள்ள தோட்டத்து வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இரவு தனது தாய், தந்தையுடன் தங்கினார். தந்தை தெய்வசிகாமணி சவரம் செய்வதற்காக மறுநாள் காலை தோட்டத்து வீட்டிற்கு வருமாறு சவரத்தொழிலாளி துரைசாமியிடம் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை தோட்டத்து வீட்டிற்கு வந்த சவரத்தொழிலாளி துரைசாமி, தெய்வசிகாமணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்தார். அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தாரை எழுப்புவதற்காக வீட்டின் கதவை திறந்தபோது அலமேலு, செந்தில்குமார் ஆகியோர் தலை, கை, ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதனால், தெய்வசிகாமணி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியின் தலையில் தாக்கியுள்ளனர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர்கள் அலமேலு, செந்தில்குமார் ஆகியோரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த 5 பவுன் நகை, அலமேலு கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிக்கொடி, செந்தில்குமாரின் செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது.
அது சம்பவ இடத்தில் ரத்தக்கரைகளை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொலை நடந்த தோட்டத்தில் தடயங்கள் ஏதேனும் சிக்குமா? என 50க்கும் மேற்பட்ட போலீசார் வீடு மற்றும் தென்னந்தோப்பு முழுவதும் ஒவ்வொரு அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது கைக்குட்டை உள்ளிட்ட சில பொருட்கள் தோட்டத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தடயவியல் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து தடய அறிவியல் துறையினர் அங்கிருந்த கை ரேகைகள், தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, நிருபர்களிடம் கூறுகையில், ‘வீட்டிலிருந்த வயதான தம்பதி மற்றும் அவரது மகன் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஊர் மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கூர்மையான ஆயுதத்தாலும், வளைந்த இரும்பு ராடாலும் தாக்கியுள்ளனர். தெய்வசிகாமணி நேற்று காலை வரை உயிருடன் தான் இருந்தார். பெரிய அளவில் கொள்ளை போகவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் படி செயல்படுகிறோம். தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடைபெறுகிறது. கும்பலாக வந்து தான் கொலை செய்துள்ளார்கள். விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம்’ என்றார்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில், காங்கயம், அவிநாசி, பல்லடம், உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கொண்ட 7 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, இக்கொலைகள் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவரை அங்குள்ள போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீரன் படம் பாணியில் நடந்த 3 பேர் கொலையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கணவர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு மனைவி கவிதா கதறி அழுதது அனைவரையும் கண் கலங்கச்செய்தது. கணவரை கொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறி அழுதார். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி ஆறுதல் கூறி கொலையாளிகளை கட்டாயம் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனக்கூறினார். அப்போது உறவினர்கள் அழுத காட்சியை பார்த்து கமிஷனரும் கண் கலங்கினார். இதேபோல், தெய்வசிகாமணியை அடித்து கொன்றதால் அவர் வளர்த்த நாயையும் சுமார் 4 மணி நேரமாக குரைத்து கொண்டிருந்தது.
* வேலைக்கு வந்த தம்பதி மீது சந்தேகம்
கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணிக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் தேங்காய் பறிக்கவும், சுத்தம் செய்யவும் ஆட்கள் வருவார்கள், அதுமட்டுமல்லாமல் தோட்டத்து வீட்டில் அருகில் உள்ள அறையில் கடந்த மாதம் ஒரு தம்பதியினர் தங்கியிருந்துள்ளனர். அதனால் போலீசார் அந்த தம்பதியின் விபரமும், வேலைக்கு வந்தவர்களின் பட்டியலையும் சேகரித்து வருகின்றனர்.
The post பல்லடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம் ஐடி ஊழியர், தாய், தந்தையை வெட்டி கொன்று நகை கொள்ளை: ஒருவரிடம் விசாரணை; கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.