திண்டுக்கல்: திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் நான்குவழிச்சாலை மேம்பாலத் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். கிளீனர் படுகாயம் அடைந்தார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (35). லாரி டிரைவர். இவர், பெங்களூருவில் இருந்து டேங்கர் லாரியில் டீசலை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார். அங்கு டீசலை பங்கில் நிரப்பிவிட்டு, மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். லாரியில் ஓசூரைச் சேர்ந்த கிரண் கிளீனராக வந்தார். வரும் வழியில் திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் உள்ள நான்குவழிச்சாலை மேம்பாலத்தில் நேற்றிரவு 10 மணியளவில் லாரி வந்தபோது, அதன் முன்பக்க டயர் வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு, இரண்டு பாலங்களுக்கு இடையே உள்ள திண்டுக்கல்-பழநி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர், கன்டக்டர் படுகாயம் அடைந்தனர். உடனே ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் சந்திரசேகர் உயிரிழந்தார். கிளீனர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன், திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன், திண்டுக்கல் மேற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் போலீசார், திண்டுக்கல் துணை தீயணைப்புதுறை நிலை அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டு, போக்குவரத்தை சீரமைத்தனர். லாரி கவிழ்ந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
The post திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலத் தடுப்புச்சுவரை உடைத்து கவிழ்ந்த டேங்கர் லாரி: டிரைவர் பலி; கிளீனர் படுகாயம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.