×
Saravana Stores

சொத்து குவித்த அரசு ஊழியர் மீது வழக்கு; அண்ணா தொழிற்சங்க மாஜி செயலாளரின் மகன் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கியது எப்படி?.. பரபரப்பு தகவல்கள்


சேலம்: வருமானத்திற்கு அதிகமாக ெசாத்து குவித்த வழக்கு அரசு ஊழியர் மீது பாய்ந்த நிலையில், அண்ணா தொழிற்சங்க மாஜி செயலாளர் மகன் விஜிலென்சில் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள நாவல்பட்டியை சேர்ந்தவர் பூபாலன் (36). இவர் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக இருந்தார். மேலும் மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பூபாலன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர் விசாரணையில் புதுத்தகவல்கள் வெளியானது. பூபாலன், கடந்த 2017ம்ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.

அவரது சம்பளம் ₹30ஆயிரம் என கூறப்படுகிறது. ஆனால் 2022ம் ஆண்டு வரை அவரது சொத்துக்களை கணக்கிட்டபோது வருமானத்திற்கு அதிகமாக 1188 சதவீதம் உயர்ந்தது தெரியவந்தது. இதன்படி அவர் ₹1 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்திற்கு அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அவர் வேலைக்கு சேர்ந்த 6 ஆண்டுகளில் சம்பளத்தை கணக்கிட்டால் ₹9 லட்சத்து 22 ஆயிரம் தான் வருகிறது. அவருக்கு மேட்டூர், கருப்பூர் ஆகிய இடங்களில் வீடுகளும், சொத்துக்களும் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் பூபாலன் எப்படி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பதிலும் புது தகவலும் வெளிந்துள்ளது. அவரது தந்தையான சென்னகேசவன் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் தான். ஆனால் அவருக்கு மண்டல அண்ணா போக்குவரத்து கழக செயலாளராக பொறுப்பு கிடைத்தது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பொறுப்பில் இருந்ததால் மாமூல் அதிகளவு கிடைத்ததாக கூறப்படுகிறது. இடமாறுதல், போக்குவரத்து ரூட்டுக்கு பணம் என குவிந்துள்ளது. அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த புகாரின்பேரில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி சென்னகேசவன் மீது 2 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தனர். அந்த விசாரணையின்போது அவருக்கு ஏராளமான வீடுகளும், சொத்துக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் அவரது மகனான பூபாலன் மீதும் அவர் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

அரசு ஊழியரான பூபாலன் மீது சொத்துக்களை வாங்கலாமா? என சென்னகேசவனுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபாலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னகேசவன் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயார் நிலையில் இருந்து வருகிறது. அவர் கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் வழக்கு இருப்பதால் பணப்பலன்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தந்தை செய்த தவறின் காரணமாக மகனும் தற்போது லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார்.

The post சொத்து குவித்த அரசு ஊழியர் மீது வழக்கு; அண்ணா தொழிற்சங்க மாஜி செயலாளரின் மகன் விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கியது எப்படி?.. பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Anna union ,Salem ,Bhubalan ,Nawalpatti ,Mettur ,Dinakaran ,
× RELATED மாமூல் வேட்டை மூலம் கோடீஸ்வரரான...