குன்னூர்: கட்டிட அனுமதிக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக நேற்று கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது அருவங்காடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் ராஜ்குமார். இவர் கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்குவதற்கு ஆன்லைனில் ரூ.78 ஆயிரம் கட்டணம் செலுத்தினார். அதன்பின், உள்ளாட்சி அமைப்பான ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார். அனுமதி வழங்க பேரூராட்சி செயல் அலுவலர் சரவணராஜன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார்.
இதனால், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சுபாஷ் ராஜ்குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுபாஷ் ராஜ்குமார், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் ராஜனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சரவணன் ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
The post கட்டிட அனுமதிக்கு லஞ்சம்: பேரூராட்சி செயல் அலுவலர் கைது appeared first on Dinakaran.