×
Saravana Stores

பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முயற்சி; வாடகை தாயாக வந்தவர் மாடியில் இருந்து விழுந்து சாவு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது


திருமலை: வாடகை தாயாக வந்தவர் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முயன்றபோது 9வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ராயதுர்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜேஷ்பாபு(54), ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்னர். இதற்காக இடைத்தரகர் சந்தீப் மூலம் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய்சிங்-அஷ்விதா(25) தம்பதியை சந்தித்தனர். செயற்கை முறையில் குழந்தை பெற்று கொடுத்தால் ₹10 லட்சம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தம்பதியினர் கடந்த அக்டோபர் 24ம்தேதி தங்களது 4வயது மகனுடன் ஐதராபாத் வந்தனர். அதன்பிறகு அஷ்விதாவை 9வது மாடியில் உள்ள ராஜேஷ்பாபு குடியிருப்பில் தங்க வைத்தனர்.

அவரது கணவர் சஞ்சய்சிங்கை 7வது மாடியில் தங்க வைத்தனர். செயற்கை முறையில் குழந்தை பெற அனுமதி பெறுவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், கடந்த 15 நாட்களாக அஷ்விதாவுக்கு ராஜேஷ்பாபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு அஷ்விதா கடும் எதிர்ப்பு தெரிவித்தும் ராஜேஷ்பாபு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் தனது கணவர், குழந்தையுடன் தங்கள் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் படிக்கட்டில் இறங்கினால் தெரிந்துவிடும் என்பதால் தனது சேலைகளை ஒன்றிணைத்து 9வது மாடியில் உள்ள கம்பியில் கட்டிவிட்டு சாய்தளம் வழியாக நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் 7வது மாடியில் இருக்கும் கணவரிடம் செல்ல இறங்கினார். ஆனால் கைகள் நழுவியதில் 9வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அஷ்விதா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ராயதுர்கம் போலீசார் சம்பவ இடம் வந்து அஷ்விதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் அளித்த புகாரின்பேரில், ராஜேஷ்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை நேற்று கைது செய்தனர்.

The post பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க முயற்சி; வாடகை தாயாக வந்தவர் மாடியில் இருந்து விழுந்து சாவு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...