டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை டிச.2 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவ.26 தொடங்கி நடைபெற்று வருகிறது. டிச.20ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம், அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்திருந்தனர். இதையடுத்து குளிர்கால கூட்டம் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தவும், சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நிகழ்ந்த வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து ஒன்றிய அமைச்சர்கள் யாரும் எதிர்க்கட்சிகளுடன் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க தயங்குகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. அதேபோல கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது.
அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை, சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நிகழ்ந்த வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். அதன்படி மாநிலங்களவை டிச.2ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post 5வது நாளாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை.. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக டிச.2 வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.