×
Saravana Stores

அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

*நகர் மன்ற தலைவர் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம், நகர் மன்ற தலைவர் சீயமான நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஆணையாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து 35 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பலர் பேசுகையில்,“சிடிசி மேடு அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தை நகராட்சிக்கு மீட்டெடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மண்டபத்தை ஏழை, எளியவருக்கு குறைந்த வாடகையில் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதியில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழைக்கு பிறகு சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தற்போது பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் நல குறைவு ஏற்படுகிறது. எனவே, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுப குடிநீர் விநியோக பணியை, மீண்டும் துவங்க வேண்டும்.

கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் உள்ள சில கம்பங்களில் பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடுகபாளையம் ரயில்வே கேட் மூடுவதாக அதிமுகவினர் நடத்திய போராட்டம், மக்களை திசை திருப்புவதாக உள்ளது.

திமுகவினர் தான் பல்வேறு கட்டமாக அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, மீண்டும் ரயில்வே கேட்டு திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். திமுக ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தல் அது ஒருபோதும் நடக்காது’’ என்றனர்.

நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பேசுகையில்,“பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணியில் நிலுவையில் இருந்தால் அதனை மீண்டும் துவங்கி விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களை கட்டுப்படுத்த அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்.

கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் எல்இடி விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இந்நிலையில், நகர்மன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, அதிமுக கவுன்சிலர்கள் சாந்தி ஜேம்ஸ் ராஜா வசந்த் ஆகியோர், திடீரென வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Municipal Council ,Pollachi ,Pollachi Municipal Office ,City Council ,President ,Siyamana Navaneetha Krishnan ,Commissioner ,Ganesan ,Dinakaran ,
× RELATED சொத்துவரி குறைவாக விதித்த...