*மாநகரை அழகுபடுத்த புதிய முயற்சி
நாமக்கல் : நாமக்கல்லில் சாலையோரங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தடுக்க, 53 இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. மாநகரை அழகுபடுத்த மாநகராட்சி இந்த புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாநகரில் 48ஆயிரம் குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் இருந்து தினமும் 54 டன் மக்கும், மக்காத குப்பை சேகரமாகிறது. இதனை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 300பேர் தினமும் வீடு தோறும் சென்று, வாகனங்களில் சேகரித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி, அதற்காக விழிப்புணர்வு இயங்கங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் மாநகரில் வசிக்கும் பொதுமக்கள், காலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோரங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடங்களை சுற்றிலும், குப்பைகளை வீசி விட்டு செல்கின்றனர். இந்த குப்பையை அகற்றுவது தூய்மை பணியாளர்களுக்கு பெரும் வேலையாக இருந்து வருகிறது.
இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில், மாநகராட்சி கமிஷனர் அறிவுரையின் பேரில், துப்புரவு பிரிவு அலுவலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், மாநகரில் பொதுமக்கள் சாலையோரங்கள், தெருக்களில் அதிகம் குப்பை கொட்டும் 53 இடங்களை கண்டறிந்தனர். இந்த இடங்களில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில், மரக்கன்று நட்டு பராமரிக்க முடிவு செய்தனர். இதன்படி முதற்கட்டமாக 29வது வார்டு கொசவம்பட்டி, 33வது வார்டு காந்தி நகர், 3வது வார்டு என்ஜிஓ காலனி, 24வது வார்டு பொய்யேரிகரை ரோடு பகுதிகளில் கழிவுகள் கொட்டும் இடங்களை தூய்மை செய்து, அதில் மரக்கன்றுகள், பூச் செடிகள் நேற்று நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, நலஅலுவலர் கஸ்தூரிபாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வக்குமார், பாஸ்கர், ஜான்ராஜா, மாமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி, சரவணன், நந்தினிதேவி, துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கந்தசாமி, மாயவன், ஜெயராமன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ஜெயப்பிரகாஸ், ஈஸ்வரி, சிவகுமார், துரைராஜ், கிரிஜா, பாலசுப்ரமணி, மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி கூறுகையில், ‘நாமக்கல் மாநகராட்சியாக மாறியுள்ளது. நகரை அழகாக வைத்து கொள்ள, ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது. அதை புரிந்து செயல்பட வேண்டும். ஒரு சில வார்டுகளில், பொதுமக்கள் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் வசம் ஒப்படைக்காமல், தெருக்களில் வீசி விட்டு செல்கின்றனர்.
இதை தடுக்கும் வகையிலும், மாநகரை அழகுபடுத்தும் வகையில், சாலையோரங்களில் அதிகம் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில், பூச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்கப்படுகிறது. குப்பைகளை அதிகம் கொட்டும் 53 இடங்களில், 30 நாட்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’ என்றார்.
The post சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சியில் 53 இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு appeared first on Dinakaran.