ஊட்டி : தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகள் பனியில் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தற்போது, ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நர்சரிகளில் தற்போது பல லட்சம் மலர் தொட்டிகளில் நாற்று நடவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊட்டியில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.மேலும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது. இதனால், மலர் நாற்றுக்களை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டள்ளனர்.
குறிப்பாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா தாழ்வான பகுதியில் உள்ளதால், இங்கு பனியின் தாக்கம் எப்போதும் சற்று அதிகமாக காணப்படும். இதனால், தற்போது தொட்டிகளில் நடவு செய்யப்படுள்ள பல்வேறு வகையான மலர் செடிகள் கருகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, இந்த மலர் செடிகள் கருகாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் தொழிலாளர்கள் தண்ணீர் பாய்ச்சி மலர் செடிகள் பனியில் கருகாமல் காத்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகிறது.
The post தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளுக்கு பிளாஸ்டிக் போர்வை மூலம் பாதுகாப்பு appeared first on Dinakaran.