வேலூர் : வேலூர் மாவட்டத்தில் 73 ரேஷன் கடை காலி பணியிடத்துக்கு நேற்று நேர்முக தேர்வில் பட்டதாரிகள் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தினமும் 1250 பேர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி, கோதுமை, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், பருப்புகள் போன்றவை வழங்கப்படுகிறது.
இதற்காக தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 34,773 ரேஷன் கடைகள் உள்ளன. அதில் மொத்தம் 26,700 பேர் பணிபுரிகின்றனர். பல ஆண்டுகளாக ரேஷன் கடைகளில் ஏற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதற்கட்டமாக 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது 2வது கட்டமாக 2 ஆயிரம் காலி பணியிடங்களை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு வகையான சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 52 விற்பனையாளர் பணியிடங்களும், 21 கட்டுநர் பணியிடங்களுக்கு மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் கடந்த 7ம் தேதி பெறப்பட்டன.
விற்பனையாளர் பணிக்கு பிளஸ்2, கட்டுனர் பணிக்கு 10ம் வகுப்பு என குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயித்து இருந்தாலும், இன்ஜினியர், முதுநிலை என உயர்கல்வி படித்த பட்டதாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக நேற்று தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதி சீட்டை தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 52 விற்பனையாளர், 21 கட்டுனர் பணிக்கு சுமார் 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நேற்று தொடங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது.வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்காணல் நேற்று தொடங்கியது.
இந்த நேர்காணலை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை தலைமையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் நடந்தது. இதில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஒரு நாளைக்கு 1,250 பேர் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்த 73 ரேஷன் கடை காலி பணியிடத்துக்கு நேர்முக தேர்வில் பட்டதாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.