மஞ்சூர் : மஞ்சூர் அருகே கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் இரவும் கரடி பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது பெற்றோர்கள், பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பெங்கால்மட்டம் கோக்கலாடா பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இப்பகுதியில் உலா வரும் கரடி பள்ளியின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடி செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இந்த காட்சியை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியின் கதவுகளை உடைத்து கரடி அட்டகாசத்தில் ஈடுபடுவது தினசரி வாடிக்கையாக உள்ளது ஆசிரியர்கள் மட்டுமின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில், ‘‘கோக்கலாடா அரசு உயர்நிலைப் பள்ளி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் காட்டில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் பள்ளி வளாகத்தில் நடமாடும். கரடியை பொருத்தவரை மீந்து போன உணவு மற்றும் சமையல் எண்ணை வாசனையை நுகரந்து அதற்காக பள்ளி சத்துணவு கூடத்தின் கதவுகளை உடைக்கிறது. கோக்கலாடா அரசு பள்ளியில் கரடி நடமாட்டம் குறித்து இரவு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற்று விரைவில் கரடியை பிடிக்க கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post மஞ்சூர் அருகே அரசு பள்ளியில் கரடி தொடர் அட்டகாசம் appeared first on Dinakaran.