கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கு மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிழக்கு பகுதியில் தலைநகர் சுமார் 280 கிமீ தொலைவில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது.
மலைப்பிரதேசமான இந்த பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆறு கிராமங்களில் 40 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த சம்பவப் பகுதியிலிருந்து இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டாலும், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் மாயமாகியுள்ளதால் மொத்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா். அதேபோல் காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் குறைந்தது ஆறு பேர் குழந்தைகள் என்று உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மழை தொடா்ந்து பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மண் மூடியுள்ளதால் மீட்பு இயந்திரங்களைக் கொண்டுவர முடியாத நிலை உள்ளது. எனினும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு உகாண்டாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. 2010ம் ஆண்டு புத்தடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
The post கிழக்கு உகாண்டாவில் பயங்கர நிலச்சரிவு: 15 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை!! appeared first on Dinakaran.