×
Saravana Stores

திருத்துறைப்பூண்டியில் சிறுபான்மையினருக்கான பொருளாதார கடனுதவி முகாம்: டிச.3ம் தேதி நடக்கிறது

திருவாரூர், நவ.29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம் அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சீயர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் இதர தொழில் செய்வதற்கு தனிநபர் கடன் திட்டம்,

கல்வி கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்கான கடன், சுய உதவி குழு ஆகிய பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடன் உதவி பெறுவதற்கான தகுதிகளாக, தமிழ்நாட்டில் வசிக்கும் மேற்படி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேற்படி கடன் திட்டம் 2024-25 நிதியாண்டிற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் துவங்கி திருவாரூர், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், மன்னார்குடி ஆகிய தாலுக்காவில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் திருத்துறைப்பூண்டி தாலுக்காவிற்கான சிறப்பு முகாம் அடுத்த மாதம் (டிசம்பர்) 3ம் தேதி திருத்துறைப்பூண்டியில் இயங்கி வரும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

எனவே இந்த முகாமில் விண்ணப்பத்துடன் சாதிசான்று நகல், வருமான சான்று நகல், இருப்பிட சான்று நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கடன் பெறும் தொழில் திட்ட அறிக்கை முதலிய ஆவணங்களுடன் கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளாவில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post திருத்துறைப்பூண்டியில் சிறுபான்மையினருக்கான பொருளாதார கடனுதவி முகாம்: டிச.3ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Tiruvarur ,Collector ,Saru ,Thiruthuraipoondi ,Tiruvarur district ,Thiruvarur district, ,Tamil Nadu ,
× RELATED திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மழை நீர் தேங்கி கிடக்கும் பகுதிகள்