×
Saravana Stores

3 மற்றும் 5வது மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகள் தயாரிக்க ரூ.3,657 கோடியில் ஒப்பந்தம்: ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது

மாதவரம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அந்நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பி.இ.எம்.எல் நிறுவன இயக்குநர் ராஜிவ்குமார் குப்தாவிடம் இதற்கான ஏற்பு கடிதத்தை நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர்கள் ராஜேந்திரன், முரளி, என்.கே.ஏ.பி நிறுவன குழு தலைவர் டோனி புர்செல், பி.இ.எம்.எல் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் பிரவீன் குமார் மத்பால் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.

இந்த ஒப்பந்ததின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2026ம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் மார்ச் 2027 முதல் ஏப்ரல் 2029 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 3 மற்றும் 5வது மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகள் தயாரிக்க ரூ.3,657 கோடியில் ஒப்பந்தம்: ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Metro Lines 3 ,Madhavaram ,Chennai Metro Rail Corporation ,BEML ,Lines 3 ,Dinakaran ,
× RELATED ரூ.58 கோடி மதிப்பீட்டில் கடப்பாக்கம்...