சென்னை: அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாதால் பொதுத் துறை செயலாளர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் கூறி, அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக 10 மாவட்ட கலெக்டர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து தங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரரேசன், ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு தடை விதித்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கலெக்டர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி அரசு தரப்பில் யார் ஆஜராகியுள்ளார் என்று கேட்டார். ஆனால், விசாரணைக்கு தமிழக அரசு தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அரசு சார்பில் யாரும் ஆஜராகததை ஏற்க முடியாது. எனவே, இதுகுறித்து மனுதாரர் என்ற முறையில், பொதுத் துறை செயலாளர் இன்று (நவ 29) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
The post அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் நீதிபதி கண்டிப்பு: பொதுத்துறை செயலாளர் இன்று ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.