ஐயப்பன் அறிவோம் மோகினி அவதாரம் 15

பாற்கடலில் கிடைத்த அமிர்தம் தான் சாஸ்தாவான ஐயப்பனின் அவதாரத்திற்கு ஆரம்பப் புள்ளியாக அமைகிறது. அமிர்தம் கிடைத்ததும், வலிமையாக இருந்த அரக்கர்கள் அமிர்தத்தை முழுமையாக அபகரித்து, முழுவதும் அருந்த எண்ணி, தேவர்களை தாக்குகின்றனர். இதனை அறிந்து கொண்ட சிவன், திருமாலை மோகினி தோற்றத்தில் சென்று, அரக்கர்களை மயக்கி தேவர்களுக்கு வாழ்வு அளிக்கும்படி கூறுகிறார். பேரழகு தோற்றமுடைய மோகினி அவதாரம் எடுக்கிறார் திருமால். பாற்கடலுக்குச் செல்கிறார் மோகினி. ஆவேசமாக இருந்த அரக்கர்களை மோகினி சமாதானம் செய்து, சமமாக பிரித்து வழங்குவதாக கூறுகிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கர்கள், மோகினி சொல்வதை கேட்கத் தொடங்குகின்றனர்.

முதலில் தேவர்களிடம் இருந்து வருகிறேன் எனக்கூறி, முழுமையான அமிர்தத்தையும் தேவர்களுக்கே வழங்கி முடிக்கிறார். அரக்கர்களுக்கு பிறகே தெரிந்தது தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. அமிர்தத்தை முழுவதும் அருந்திய தேவர்களுக்கு வலிமையும், இழந்த சக்தியும் மீண்டும் கிடைக்கிறது. இதனால் அரக்கர்களை அடித்து விரட்டி விட்டு, மீண்டும் தேவலோகத்தை கைப்பற்றி, அரியணை ஏறுகிறார் தலைவன் இந்திரன். தோல்வியுற்று பயந்தோடிய அரக்கர்கள், தங்களின் அரசியான மகிஷியை தேடி அலைகிறார்கள். பூலோகத்தில் சுந்தர மகிஷனுடன், மகிஷி இல்லற வாழ்க்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர். பிறகு மகிஷியை சந்தித்து, நடந்த அனைத்தையும் கூறி, தேவர்கள் சூழ்ச்சி செய்து, உங்களை சுகபோக வாழ்விற்கு அடிமையாக்கி, பாற்கடல் அமுதத்தை அருந்தி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்துவிட்டார் இந்திரன் என விளக்கி கூறுகின்றனர்.

இதில் ஏதோ மறைமுக சூழ்ச்சி இருக்கிறது என அறிந்து கொண்ட மகிஷி, சுந்தர மகிஷத்தை ஒதுக்கிவிட்டு, தனது வரத்தின் பலத்தால் அசுர பலத்துடன் கூடிய படையை உற்பத்தி செய்து, மீண்டும் தேவலோகத்தை அடைகிறாள். சுந்தர மகிஷம் மும்மூர்த்திகள் தனக்கு கொடுத்த கடமை முடிந்ததை எண்ணி மகிழ்ந்து, தனது உருவத்தை துறந்து மீண்டும் மூல சக்திகளான மும்மூர்த்திகளிடம் தத்தாத்ரேயராக சரணாகதி அடைகிறார்.நேரடியாக இந்திரனை நோக்கி போரை துவங்குகிறாள் மகிஷி. தேவர்களும் எதிர்தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் அசுர பலம் பொருந்திய மகிஷியை வெல்ல முடியவில்லை. மகிஷியை வெல்வதற்கு, தர்மசாஸ்தாவின் அவதார நோக்கம் நிறைவேற வேண்டி, சாஸ்தாவின் தலை பகுதியான ‘பிரம்மாந்திரம்’ அமைந்துள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் சாஸ்தாவை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர் தேவர்கள். சுவாமியே சரணம் ஐயப்பா… நாளையும் தரிசிப்போம்.

The post ஐயப்பன் அறிவோம் மோகினி அவதாரம் 15 appeared first on Dinakaran.

Related Stories: