பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

அரியலூர், நவ. 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதன் மூலம் லார்வா பீப்பா என உருமாறி 10 நாட்களில் கொசுவாக உற்பத்தி ஆகிறது. ஏடிஸ் கொசு பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கக்கூடியது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக ஏடிஸ் கொசு புழுக்கள் உருவாகும் இடங்களான பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர், தேங்காய் ஓடுகள், சிமெண்ட் தொட்டி மற்றும் பேரல்கள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றில் நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும். மேலும், நீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொசு புகாவனம் மூடி வைக்க வேண்டும்.

வீடு, பள்ளிகள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து தினமும் குடிநீர் வழங்கும்போது குளோரினேசன் செய்து குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும். அனைத்து இடங்களில் உள்ள தரைகுழி குழாய்களை அகற்றிடுதல் வேண்டும். காய்ச்சல் கண்ட பகுதிகளில் கொசு தடுப்பு நடவடிக்கை புகை மருந்து அடிக்க நகராட்சி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் செயலர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான மூலப்பொருட்கள் தடையின்றி வழங்குதல் வேண்டும் .மேலும் பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று முறையான சிகிச்சை பெறுவது மிக முக்கியமானதாகும். காலதாமதம் செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சுயமாக மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. போலி மருத்துவரிடம் செல்வதை தவிர்த்திட வேண்டும். இதேபோன்று தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு சுவாச கோளாறுகள் மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்பட்டு உயிர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி அருகாமையிலும் மற்ற அனைத்து பிற இடங்களிலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, அறிவுறுத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் மணிவண்ணன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மாரிமுத்து, மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் ராஜா மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மாத்திரைகள் வாங்கி சாப்பிடக்கூடாது: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: