×
Saravana Stores

ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; 334 பயனாளிகளுக்கு ₹1.44 கோடி நல உதவி: பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார்

பாடாலூர், நவ.28: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலெக்டர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நான் பல கிராமங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் போது அங்குள்ள மக்களின் அதிகப்படியான கோரிக்கையாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வேண்டி மனுக்கள் அளித்து வருகிறார்கள். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 1200 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். வீடற்ற ஏழை எளியோர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டறிந்து தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வீடு வழங்கிட வேண்டும்.

இலவச வீட்டு மனை பட்டாக்கள் வேண்டி பொது மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயம் சார்ந்த திட்டங்களை அறிந்து கொள்வதற்காக வேளாண்மை துறையால் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இச்செயலியினை ஸ்மார்ட் போன் மூலம் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொண்டு மழை பொழியும் நேரம், மழையின் அளவு மற்றும் வேளாண் தொடர்பான நலத்திட்ட உதவிகள், திட்டங்கள் போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற்று பயனடையலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவுத்திட்டம் போன்ற சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது போன்று நடைபெறும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி மிக விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நாட்டுக்கோழிப்பண்ணை 50 சதவிகிதம் மானியத்தில் அமைத்திட 01 பயனாளிக்கு ரூ.3,13,750 என மொத்தம் 334 பயனாளிகளுக்கு ரூ.1,44,44,987 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார்.

பின்னர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வீட்டு மனைப் பட்டா பெற்ற சில்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த பயனாளி சுகந்தி மற்றும் தாட்கோ மூலம் ரூ.1,00,000 மதிப்பில் கறவை மாடு கடனுதவி பெற்ற கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பயனாளி ரத்தினம்மாள் ஆகியோர் தமிழக அரசின் திட்டங்கள் மிகப் பயனுள்ளதாகவும், விரைந்து கிடைக்க பெறுவதாகவும், பேருதவியாக உள்ளதாகவும், இதுபோன்ற திட்டங்கள் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்த மனமாக பயனாளிகள் நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப் கலெக்டர் கோகுல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், தாட்கோ மேலாளர் கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராமன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்தியா, ஆலத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனிச்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; 334 பயனாளிகளுக்கு ₹1.44 கோடி நல உதவி: பெரம்பலூர் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Relations Project ,Camp ,Zemeen Athur Panchayat ,Perambalur ,Padalur ,District ,Collector ,Grace Bachau ,Gemeen Attur Panchayat ,Alathur Taluk ,Perambalur District ,Dinakaran ,
× RELATED துங்கபுரம் வடக்கு கிராமத்தில் டிச. 11ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்