களஆய்வு கூட்டத்தில் அடிதடி எதிரொலி அதிமுக செயற்குழு, பொதுக்குழு டிச.15ல் அவசரமாக கூடுகிறது: எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு

சென்னை: உள்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதிக்க டிசம்பர் 15ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி திடீரென அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் சந்திக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதையொட்டி, அவரது தலைமையை எதிர்க்கும் கூட்டணி கட்சிகளையும் அதிமுக கழற்றி விட்டுள்ளது. தற்போது, ஒரு சில சிறிய கட்சிகள் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணியில் தொடருகிறது.

இந்த கூட்டணியுடன் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்தால் அதிமுக தோல்வி நிச்சயம் என்று கட்சியின் பல முன்னணி தலைவர்கள் பகிரங்கமாக எடப்பாடியை எச்சரித்து வருகிறார்கள். ஆனாலும், எடப்பாடி அதையெல்லாம் பொருட்படுத்தாமல், கட்சியில் இருந்து விலகி சென்றவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை எதிர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கட்சியின் வளர்ச்சி பணிக்காக, அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்று கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த களஆய்வு குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் செம்மலை, பா.வளர்மதி உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கள ஆய்வு குழுவினர் நேரடியாக சென்று, அதிமுக 2ம், 3ம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து குறைகளை கேட்டனர். ஆனால், இந்த குழுவினர் போன இடம் எல்லாம் அதிமுகவினர் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்சி தலைமையை எதிர்த்து பேசியதுடன், அடிதடியிலும் இறங்கினர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர்கள், “கட்சி தலைமைக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டாம். தலைமை எடுக்கும் முடிவையே செயல்படுத்த வேண்டும்” என்று மிரட்டும் தொனியிலேயே பேசினர். இதனால் அதிமுக தொண்டர்கள் மேலும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், சேலத்தில் நேற்று முன்தினம் நடக்க இருந்த அதிமுக கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டு, 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில மாவட்டங்களில் கட்சி தலைமைக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து களஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் தலைமைக்கு தொண்டர்களிடம் உள்ள எதிர்ப்பை கண்டு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனது செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விவாதிக்க அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டத்தை அவசரமாக எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சியின் சட்ட திட்ட விதிகளின்படி, வருகின்ற 15.12.2024 (ஞாயிறு) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், டிசம்பர் 15ம் தேதி கூட்டியுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் திட்டமிட்டுள்ளனர். இதனால், அதிமுகவில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

The post களஆய்வு கூட்டத்தில் அடிதடி எதிரொலி அதிமுக செயற்குழு, பொதுக்குழு டிச.15ல் அவசரமாக கூடுகிறது: எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: