செல்லும் இடமெல்லாம் மோதல், அடிதடி, தகராறு; கள ஆய்வு கூட்டத்திற்கு மாஜி அமைச்சர்கள் வர தடை: எடப்பாடி பழனிசாமியே நடத்த முடிவு; டோக்கன் வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கே அனுமதி?

சேலம்: நெல்லை, குமரி, கும்பகோணம், மதுரை, திருப்பரங்குன்றத்தில் அதிமுக களஆய்வு கூட்டத்தில் நடந்த மோதல், அடிதடியை தொடர்ந்து மாஜி அமைச்சர்களுக்கு தடைவிதித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் தானே தலைமை தாங்கி ஆய்வு கூட்டத்தை நடத்துகிறார். அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நெல்லை, குமரி, கும்பகோணம், மதுரை, திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கோஷ்டி மோதல் காரணமாக ஒருவருக்கு ஒருவர் தகராறு, அடிதடியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேலத்தில் கடந்த செவ்வாய்கிழமை (26ம்தேதி) களஆய்வு கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் தங்கமணி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் முன்னிலையில் ஏற்பட்ட மோதலையடுத்து சேலம் கூட்டம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், தனக்கென தனிக்கோஷ்டியை உருவாக்கி வருவதாகவும், ஆதரவாளர்களுக்கே பதவிகள் வழங்கப்படுவதாகவும், நிர்வாகிகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் கள ஆய்வு செய்ய வரும் முன்னாள் அமைச்சர்களிடம் புகார் அளிக்கவும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட கள ஆய்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லா இடங்களிலும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் மோதல் ஏற்பட்டால் பெருத்த சிக்கல் ஏற்படும், அவரது ஊரிலேயே கட்சி கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்ற நிலை உருவானால் அவமானமாகிவிடும் என கருதிய, எடப்பாடி பழனிசாமி, கூட்டத்தை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடத்த இருக்கிறார். அவரே தலைமை தாங்கி இந்த கள ஆய்வு கூட்டத்தை நடத்த உள்ளார்.மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோரை சேலம் கூட்டத்திற்கு வரவேண்டாம் என கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

நாளை காலை சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளையும், மாலை 3 மணிக்கு சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து எடப்பாடி கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கிடையில் கால் வலியால் அவதிப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் வந்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கள ஆய்வு கூட்டத்தில், எந்த சலசலப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுவார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

‘கூட்டணி நிரந்தரமல்ல’
சிவகங்கையில் அதிமுக கள ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், ‘‘அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல. கூட்டணியும் நிரந்தரமில்லை. வெற்றியும் நிரந்தரமில்லை. மாறுதலுக்குட்பட்டதுதான் அரசியல் களம். கூட்டணி தேவை தான். ஆனால், அதிமுகவிற்கு கூட்டணி இல்லாமலே வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி. அது வெற்றி பெறும் கூட்டணியாக இருக்கும்’’ என்றார்.

The post செல்லும் இடமெல்லாம் மோதல், அடிதடி, தகராறு; கள ஆய்வு கூட்டத்திற்கு மாஜி அமைச்சர்கள் வர தடை: எடப்பாடி பழனிசாமியே நடத்த முடிவு; டோக்கன் வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கே அனுமதி? appeared first on Dinakaran.

Related Stories: