திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சாக்கடை நீர் தேக்கம்: தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தவிப்பு

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், மணலி மற்றும் மாதவரம் ஆகிய பகுதிகளில் நேற்றுமுதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்குள்ள நெடுஞ்சாலை பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் சன்னதி தெருவில் பாதாள சாக்கடையில் மழைநீர் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு மேனுவல் வழியாக கழிவுநீருடன் மழைநீர் வெளியேறி கோயில் வாசல் பகுதியில் தேங்கியுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘’திருவொற்றியூர் பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்யும்போது மழைநீர் பாதாள சாக்கடைகளில் செல்லும்போது தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வெளியேறி சாலையில் தேங்கிவிடுகிறது. ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுகிறது. வடிவுடையம்மன் கோயில் வாசலில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சன்னதி தெரு, அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை முழுமையாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

The post திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சாக்கடை நீர் தேக்கம்: தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: