தேனியில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் பேரணி

தேனி, நவ.27: தேனியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தேனி மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தேனியில் நேற்று கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சக்கரைமுருகன் தலைமை வகித்தார். ஐக்கிய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் தொழிற்சங்கத்தினர் தேனி நகர் பங்களாமேடு தொடங்கி மதுரை ரோடு வழியாக பழைய பஸ் நிலையம் அருகே கம்பம் ரோடு வரை சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உணவு மருந்துகள், வேளாண்மை இடுபொருள்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், பெட்ரோல், டீசல், காஸ் மீதான மத்திய கலால் வரியை குறைத்திட வேண்டும், பொது விநியோகத்தை விரிவாக்கி உணவு பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் செல்வராஜ், ராஜ்குமார், சத்யமூர்த்தி, காசிவிஸ்வநாதன், மீனா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் ஒன்றிய அரசைக் கண்டித்து விவசாயிகள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories: