ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பேருந்து மீது பைக் மோதியதில், எதிர் திசையில் வந்த லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் கல்லூரி மாணவன் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அருகே போளிவாக்கம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் தரணிசெல்வன் (21). ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக, பைக்கில் போளிவாக்கத்தில் இருந்து தண்டலம் – பேரம்பாக்கம் சாலையில் தண்டலம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
மண்ணூர் அருகே சென்றபோது, சாலையில் முன்னாள் சென்றுக்கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை பேருந்தின் பக்கவாட்டில் பைக் மோதியதில் தரணிசெல்வன் கீழே விழுந்தார். அப்போது, எதிர்திசையில் வந்த லாரி ஏறி இறங்கியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தரணிசெல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் கல்லூரி மாணவன் தலை நசுங்கி பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் appeared first on Dinakaran.