அசாம் மாநில வாலிபர் கொலை வழக்கு 5 ஆண்டு தலைமறைவு குற்றவாளிகள் கைது

கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு அசாம் மாநிலத்தை சேர்ந்த தியோரி (21) என்பவர் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அவருடன் கீழ்தளத்தில் தங்கி இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த 4 பேருக்கும் மேல் தளத்திலிருந்து கீழ்தளத்தில் கழிவுநீர் ஊற்றியதில் ஏற்பட்ட தகராறில் 4 வாலிபர்களும் சேர்ந்து தியோரியை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஓட்டேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சுரேஷ், பிந்து, அமிர்தலால், ஜிதேந்தர் ஆகிய 4 பேரும் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்தனர். இதனையடுத்து, 4 பேரும் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதில், 4 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 4 பேரையும் பிடிக்க ஓட்டேரி போலீசாருக்கு அதிரடியாக பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில், கடந்த 24ம் தேதி ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை போலீசார் உத்தரபிரதேசத்திற்கு விரைந்து சென்று சுரேஷ்(30) மற்றும் ஜிதேந்தர்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மறுநாள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் தங்கியிருந்த அமிர்தலால்(51) என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தாம்பரம் அடுத்த சங்கர் நகர், திருநீர்மலையில் தங்கி இருந்த பிந்து(36) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post அசாம் மாநில வாலிபர் கொலை வழக்கு 5 ஆண்டு தலைமறைவு குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: