கனமழையின் போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு. சுரங்கப் பாதைகள் மேம்பாலங்களுக்கு கீழ் மழைநீர் தேங்கி இருந்தால் மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும். கனமழையின் போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தியுள்ளார்.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் நாளை புயல் உருவாகிறது. இந்த புயல் தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகர கூடும் என்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தெற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையை தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்றது. புயல், மழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு அளித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் போதுமான நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதோடு, பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கென பல்துறை மண்டலக் குழுக்கள். மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன என்று இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்

குறிப்பாக, அதிக மழைபொழிவினை பெற்றுவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில், 125 JCB இயந்திரங்கள், 75 படகுகள், 250 ஜெனரேட்டர்கள், 281 மர அறுப்பான்கள்: கடலூர் மாவட்டத்தில் 242 JCB இயந்திரங்கள். 51 படகுகள், 28 ஜெனரேட்டர்கள், 104 மர அறுப்பான்கள். 58 மோட்டார் பம்புகள்: மயிலாடுதுறை மாவட்டத்தில், 85 JCB இயந்திரங்கள். 70 படகுகள், 164 ஜெனரேட்டர்கள், 57 மர அறுப்பான்கள், 34 மோட்டார் பம்புகள்: திருவாரூர் மாவட்டத்தில் 125 JCB இயந்திரங்கள், 18 படகுகள், 142 ஜெனரேட்டர்கள், 73 மர அறுப்பான்கள். 18 மோட்டார் பம்புகள்; தஞ்சாவூர் மாவட்டத்தில் 59 JCB இயந்திரங்கள், 29 படகுகள், 69 ஜெனரேட்டர்கள், 711 மர அறுப்பான்கள், 42
மோட்டார் பம்புகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கையாக திருவாரூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது. மேலும், மேற்படி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஏற்கெனவே, மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க அறிவுரை வழங்கப்பட்டு பெரும்பான்மை படகுகள் கரை திரும்பியுள்ளன. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள படகுகள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல நவீன தொலைத்தொடர்பு சாதனங்களுடன் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் பல்துறை அலுவலர்களுடன் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிவாரண முகாம்களை அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கனமழையின் போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வரவேண்டும் என்றும், வெள்ளநீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவன மேலாண்மை இயக்குநர் நந்தகுமார். மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கனமழையின் போது பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: