பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்ததால் விற்பனை மந்தமானது

*பண்ணை விலை ரூ.28 ஆக சரிந்தது

பொள்ளாச்சி : தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை எதிரொலியால் பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்புவது தற்போது குறைந்துள்ளதுடன், விற்பனை மந்தத்தால் பண்ணை விலை ரூ.28 ஆக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, இன்னும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அதிகளவில் இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மழை குறைவான காலங்களில், இளநீர் விற்பனை சூடுபிடித்ததுடன், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு லாரி மற்றும் டெம்போக்கள் மூலம் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகளவு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் துவக்கத்தில் இருந்து சில மாவட்டங்களில் பருவமழை பெய்தது. இதனால், இளநீர் விற்பனை மந்தமானதுடன், வெளியிடங்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைய துவங்கியது. இந்நிலையில், தற்போதும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சென்னை மற்றும் விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பொள்ளாச்சியில் இருந்து இளநீர் அனுப்பும் பணி கடந்த இரண்டு வாரமாக மிகவும் குறைந்துள்ளது. மேலும், தென்மாவட்டங்களிலும் தற்போது அடிக்கடி பெய்யும் மழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் இளநீர் அனுப்புவது குறைந்ததாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் தற்போது இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், வெளியூர்களில் விற்பனை மந்தமானதால் வெளி மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை, கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக குறைந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இளநீர் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், விற்பனை மந்தத்தால், கடந்த மாதம் இறுதியில் ரூ.38 வரை இருந்த இளநீர் தற்போது ரூ.35 ஆக சரிந்தது. வெளி மாவட்டங்களில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பதுடன், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பனியும் ஓரளவு குறைந்தால் மட்டுமே மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்ததால் விற்பனை மந்தமானது appeared first on Dinakaran.

Related Stories: