தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளிடையே ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், பள்ளி மாணவ- மாணவிகளிடையே ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கட்டாயப் பணி ஓய்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு POCSO சட்டம், பள்ளிகளில் SSAC அமைப்பு மற்றும் பள்ளிகளில் கல்வி சார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதுசார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசாணை 121-ன் கீழ் மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடாக, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, தண்டனை வழங்குதல், கட்டாய ஓய்வு (Compulsory Retirement) பணிநீக்கம் (Removal) / பணியறவு (Dismissal), மற்றும் அவர்களின் கல்விச் சான்றுகளை ரத்து செய்ய பரிந்துரைத்தல் போன்றவை குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுதல் தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Student Safeguarding Advisory) அமைக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு உறுதி மொழி எடுத்தல், ஒவ்வொறு பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கெதிரான வன்முறைகள் தடுப்பு தொடர்பான தகவல்களை அனைந்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் ஆசிரியர்கள் விளக்கி கூறுதல் வேண்டும். மாணவர் மனசுப் பெட்டி, 14417 மற்றும் 1098 ஆகிய தொடர்பு எண்களை மாணவ / மாணவிகள் அறிந்துகொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் வாயியாக NSS, NCC Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகள் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு முறையான அனுமதி பெற்றிருத்தல் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நடத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (POCSO) சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையத்தால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வெளியிடப்பட்ட YOUTUBE video-க்களை பள்ளியில் காண்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பப்பட்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் சர்ந்து பள்ளி முதல்வர் / தாளாளர்/ ஆசிரியர் / ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோர் பயிற்சி அளிக்கவண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் மீது ஒழுக்க செயல்பாடுகள் நடைபெறுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post பள்ளி மாணவர்களிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.